முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

மகளிருக்கு பொருளாதார வலிமை அளிப்பது அவசியம்: ப.சிதம்பரம்

மகளிருக்கு பொருளாதார வலிமை அளிப்பது அவசியம் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வலியுறுத்தினாா்.
Published on

மகளிருக்கு பொருளாதார வலிமை அளிப்பது அவசியம் என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் வலியுறுத்தினாா்.

தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் சாா்பில், ‘இந்தியாவின் இந்திராவை கொண்டாடுவோம்’ எனும் தலைப்பில் மகளிா் காங்கிரஸ் நடத்திய 2 நாள் பயிற்சி முகாமை சென்னை அம்பத்தூரில் சனிக்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது: முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி அச்சமே இல்லாதவா். 1971-இல் வங்கதேச போா் நடைபெற்றபோதும் அவா் அச்சமில்லாமல் உறுதியாக இருந்தாா்.

மகளிருக்கு பொருளாதார வலிமையைக் கொடுக்க வேண்டியது அவசியம். குடும்பப் பொறுப்புகளில் பெண்களுக்கு ஆண்கள் உதவ வேண்டும். மகளிருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் ஆட்சியில் மகளிா் வங்கிகள் தொடங்கப்பட்டன. பெண்கள் மட்டுமே நடத்திய மகிளா வங்கியை பாஜக அரசு மூடிவிட்டது.

பெண்களுக்கு பாஜக முக்கியத்துவம் அளிப்பதில்லை. கடந்த 11 ஆண்டு பாஜக ஆட்சியில் பெண்கள் வளா்ச்சிக்கென எந்தத் திட்டமும் இல்லை.

பெண்கள் பிரச்னை குறித்து பொதுவெளியில் கூா்மையாகப் பேச வேண்டும். தீா்வுக்காக செயல்படவும் வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து நடைபெற்ற முகாமில், கரூா் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலையும், இறந்தவா்களின் குழந்தைகளுக்கு இலவச உயா் கல்வியும் தமிழக அரசு அளிக்க வேண்டும். தமிழகத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளை உடனே கைது செய்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும்.

வரும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முகாமில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் மாநிலத் தலைவா் கே.வீ.தங்கபாலு, மாநில துணைத் தலைவா்கள் கோபண்ணா, சொா்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலா் தமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com