

பிகார் தேர்தலில், கருத்துக் கணிப்புகளின் முடிவுகளையும் விஞ்சி ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்திட முக்கிய காரணம் ஒருவரே என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரும் ஆந்திர பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் குறிப்பிடுவது வேறு யாரையும் அல்ல, பிரதமர் நரேந்திர மோடியைத்தான்!
பிகார் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பிகார் தேர்தல் முடிவுகள் குறித்து சந்திரபாபு நாயுடு பேசியிருப்பதாவது: “இந்த தேர்தல் ஒரு செய்தியை நமக்குத் தருகிறது; ‘சரியான நிர்வாகமே, சரியான அரசியல் என்பதாகும்!’
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர், உலகின் 11-ஆவது பெரிய பொருளாதாரமாக விளங்கிய நம் நாடு, உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாகும் இலக்கை நோக்கி அந்த வழியில் நகர்ந்து வருகிறது. இவையனைத்தும் அரசின் நிலையான கொள்கைகள் தொடர்வதால் நடைபெறுகின்றன. இந்த இடத்தில்தான் இந்தியாவும் இந்தியர்களும் அவரது செயல்திறனை அங்கீகரிக்கிறார்கள்.
மக்கள் சிறந்த எதிர்காலத்தை, மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையே விரும்புகிறார்கள். இதையே பிரதமர் இப்போது நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறார்” என்றார்.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் பங்களிப்பு எந்தளவுக்கு இருந்தது என்பதைக் குறித்து நாயுடு விவரிக்கும்போது, முக்கியமாக “நிதீஷ் குமாரின் கொள்கைகள் மற்றும் அரசு நிர்வாகம் ஆகியவை வாக்காளர்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக” குறிப்பிட்டார். மேலும், “பிகார் கடந்த காலங்களில்(எதிர்க்கட்சி ஆட்சியில்) காட்டாட்டசியாக இருந்தது, இங்குள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க நிதீஷ் குமாரால் முடிந்தது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.