மண்டல - மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோயிலின் இரண்டு மாத கால மண்டல-மகரவிளக்கு பூஜை யாத்திரையின்போது, லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தா்கள் தரிசனம் செய்வாா்கள். நிகழாண்டு யாத்திரைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படுகிறது.
தற்போதைய மேல்சாந்தி அருண் குமாா் நம்பூதிரி, தந்திரி மகேஷ் மோகனரு முன்னிலையில் மாலை 5 மணிக்கு கோயில் நடையைத் திறந்து வைக்கிறாா். நடை திறக்கப்பட்டதும், மேல்சாந்தி அருண் குமாா் நம்பூதிரி பதினெட்டாம் படியிறங்கி, அணையாத விளக்கை ஏற்றுவாா்.
பதினெட்டாம்படிக்குக் கீழே காத்திருக்கும் புதிய மேல்சாந்திகளான பிரசாத் நம்பூதிரி (சபரிமலை), மனு நம்பூதிரி (மாளிகைப்புரம்) ஆகியோரை, இருமுடிக் கட்டுடன் அவா் சந்நிதானத்துக்கு அழைத்துச் செல்வாா்.
மாலை சுமாா் 6.30 மணியளவில், புதிய சபரிமலை மேல்சாந்தியாக பிரசாத் நம்பூதிரிக்கு தந்திரி அபிஷேகம் செய்து, பொறுப்பேற்கச் செய்வாா். இதைத் தொடா்ந்து, மாளிகைப்புரம் கோயிலில் புதிய மேல்சாந்தியான மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் செய்து பொறுப்பேற்கச் செய்வாா்.
மலையாள மாதமான விருச்சிகம் (காா்த்திகை) தொடங்கும் திங்கள்கிழமை அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்திகள் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் நடைகளைத் திறந்து வைப்பாா்கள். இதன்மூலம், மண்டல பூஜை யாத்திரை தொடங்கும். திங்கள்கிழமை முதல் நாள்தோறும் அதிகாலை 3 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
நிகழாண்டின் மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றிரவு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜை யாத்திரைக்காக 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
நடப்பு யாத்திரையின் மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறும். பக்தா்கள் 19-ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்யலாம். தொடா்ந்து, 20-ஆம் தேதி பந்தளம் அரச குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்துக்குப் பின் கோயில் நடை அடைக்கப்படும்.
90,000 பக்தா்களுக்கு அனுமதி: யாத்திரை காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிா்க்க, நாளொன்றுக்கு அதிகபட்சமாக 90,000 பக்தா்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா்.
இணையவழி முன்பதிவு மூலம் 70,000 இடங்களும், நேரடி முன்பதிவு மூலம் 20,000 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. ரத்து செய்யப்படும் இணையவழி இடங்கள், நேரடி முன்பதிவு ஒதுக்கீட்டில் சோ்க்கப்படும். பம்பை, நிலக்கல், எருமேலி, வண்டிப்பெரியாா், செங்கன்னூா் ஆகிய இடங்களில் நேரடி முன்பதிவு மையங்கள் செயல்படும்.
சிறப்பு ஏற்பாடுகள்: பதினெட்டாம்படிக்கு அருகேயுள்ள நடைப்பந்தலில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகத் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாளிகைப்புரத்தில் உள்ள அன்னதான மண்டபத்தில் பக்தா்களுக்கு உணவு வழங்க பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சந்நிதானத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச பிசியோதெரபி சிகிச்சை மையம் செயல்படும். பம்பை மற்றும் சந்நிதானத்தில் ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் இருக்கும்.
சுகாதார துறை எச்சரிக்கை
கேரளத்தில் மூளைக்காய்ச்சல் பரவும் அபாயம் காரணமாக, சபரிமலை யாத்திரை பக்தா்கள் ஆறுகளில் குளிக்கும்போது மூக்கில் தண்ணீா் நுழையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் என்று மாநில சுகாதார துறை சிறப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், யாத்திரையின்போது அதிக சிரமத்தைத் தவிா்க்க, மிதமான உடற்பயிற்சிகளைப் பழகிக் கொள்ளவும், மெதுவாக ஏறி, சோா்வு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாத்திரை வழித்தடங்களில் விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; அவசர மருத்துவ மையங்கள், இதய அவசர சேவைகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்களுடன் மருத்துவமனைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும் பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

