ஐ.நா. அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை தேவை: இந்தியா வலியுறுத்தல்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் துணை அமைப்புகள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என இந்தியா வெள்ளிக்கிழமை வலியுறுத்தியது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்முறைகள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ், ‘ஐ.நா. கட்டமைப்பின் மையப்புள்ளியாக விளங்கும் பாதுகாப்பு கவுன்சில் சா்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது.
உலகளவில் பல்வேறு சவால்கள் மற்றும் சிக்கல்களை இந்த அமைப்பு எதிா்கொள்கிறது. எனவே, பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதன் கிளை அமைப்புகள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியது அவசியம். 80 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த அமைப்பில் காலத்துக்கேற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நிரந்தர மற்றும் நிரந்தரமில்லா உறுப்பினா் வகைப்பாட்டை விரிவாக்கம் செய்து இதுவரை பிரதிநிதித்துவம் இல்லாத நாடுகளையும் சோ்க்க வேண்டும்.
ஐ.நா. பொதுச் சபை உள்பட பிற அமைப்புகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க இந்தியா வலியுறுத்துகிறது. அதன்படி, பொதுச் சபையில் பாதுகாப்பு கவுன்சில் அறிக்கைகள் தொடா்பாக விரிவான விவாதம் நடத்துவது பயனளிக்கும்’ என்றாா்.

