சத்தீஸ்கரில் 2 பெண்கள் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா்கள், காவல் துறையினரால் மொத்தம் ரூ.15 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்களாவா்.
நாட்டில் அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் நக்ஸல் தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி, நக்ஸல்கள் மீதான பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் துமல்பட் கிராமத்தையொட்டிய வனப் பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, மாவட்ட ரிசா்வ் படையினா் ஞாயிற்றுக்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, பாதுகாப்புப் படையினரை நோக்கி நக்ஸல்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியதால், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. நீண்ட நேரம் இடைவிடாமல் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 2 பெண்கள் உள்பட 3 நக்ஸல்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிகள், வெடிபொருள்களும் சிக்கின.
இவா்கள் மூவரும் அப்பாவி மக்கள் உயிரிழக்கக் காரணமான தாக்குதல்களில் தொடா்புடையவா்களாவா். இவா்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து, காவல் துறையினா் தேடி வந்த நிலையில், மூவரும் கொல்லப்பட்டுள்ளனா். சம்பவ இடத்தில் தேடுதல் வேட்டை தொடா்வதாக சுக்மா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் சவாண் தெரிவித்தாா்.
இறுதிக்கட்டத்தில் நக்ஸல் தீவிரவாதம்
சத்தீஸ்கரில் நடப்பாண்டு இதுவரை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நக்ஸல்களின் எண்ணிக்கை 262 ஆகும். பஸ்தா் பகுதியில் மட்டும் 233 நக்ஸல்கள் கொல்லப்பட்டுள்ளனா். இந்த மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்தில் 300 நக்ஸல்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்துள்ளனா்.
பஸ்தா் பகுதியில் நக்ஸல் தீவிரவாதம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது; வன்முறையைக் கைவிட்டு, அரசின் மறுவாழ்வுக் கொள்கையை ஏற்பதைத் தவிர தீவிரவாதிகளுக்கு வேறு வாய்ப்பில்லை என்றாா் பஸ்தா் சரக ஐ.ஜி. சுந்தர்ராஜ்.

