பிகார் பேரவைத் தேர்தல் எதிரொலி: உ.பி.யில் ‘இண்டி’ கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறி!

2027-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில் "இண்டி' கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா கூட்டணியினர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா.
இந்தியா கூட்டணியினர் ராகுல் காந்தி, முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், பிரியங்கா.கோப்பிலிருந்து...
Published on
Updated on
2 min read

பிகார் தேர்தலில் பாஜகவை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, வரும் 2027-ஆம் ஆண்டில் சட்டப் பேரவைத் தேர்தலை சந்திக்க உள்ள உத்தர பிரதேசத்தில் "இண்டி' கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் "இண்டி' கூட்டணியின் முக்கிய பங்குதாரர்களாக சமாஜவாதி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. இந்தக் கட்சிகள் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக கணிசமான தொகுதிகளைக் கைப்பற்றின. அப்போது இந்தக் கட்சிகள் வகுத்த உத்தியானது, உத்தர பிரதேசத்தின் அண்டை மாநிலமான பிகாரில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றியால் கேள்விக்குறியாகியுள்ளது.

பிகார் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதுடன் எதிர்கூட்டணியில் சந்தேகங்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸ் முஸ்லிம் லீக் மற்றும் மாவோயிஸ்ட் கட்சி என்று வர்ணித்த பிரதமர் மோடி, அக்கட்சி பிளவை எதிர்நோக்கியுள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளது தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்துகள் காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரங்களை மதிப்பீடு செய்வதாக அமைந்ததுடன் உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த விவாதங்களின் தொடக்கமாகவும் உள்ளது.

பிகார் தேர்தல் முடிவு தொடர்பாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். பாஜக ஒரு கட்சி அல்ல என்றும் அது ஒரு மோசடி அமைப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அதே வேளையில் பாஜகவின் தேர்தல் உத்தியில் இருந்து எதிர்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா கருத்து தெரிவிக்கையில் "மகத் (பிகார்) பகுதியைத் தொடர்ந்து தற்போது அவத் (உத்தர பிரதேசம்) பகுதியில் பாஜக வெற்றி பெறும்' என்று கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் தங்கள் கட்சி பெறவுள்ள வெற்றிக்கு முன்னோட்டமாகவே பிகார் தேர்தல் அமைந்துள்ளதாக பாஜக கருதுவதை அவர் பிரதிபலித்துள்ளார். பிகார் தேர்தல் முடிவைக் கொண்டு தனது தொண்டர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் உத்வேகம் அளிக்க பாஜக தீர்மானித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சமாஜவாதி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கணிசமான வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் தற்போது பிகார் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து எச்சரிக்கையுடன் கூடிய அணுகுமுறையைப் பின்பற்றுகிறது.

வரும் 2027-இல் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தலில் தனது கூட்டணியின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதை காங்கிரஸ் தவிர்த்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி பிளவை எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தின்போது குறிப்பிட்டது காங்கிரஸில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. இந்தக் கூட்டணி வரும் 2027-இல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி தற்போது மாநில அரசியல் அரங்கில் எழுந்துள்ளதை மறுக்க முடியாது என்பதே தற்போதைய கள நிலவரமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com