உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரேANI

உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் விருப்பப்படி முடிவெடுக்கலாம்: உத்தவ் தாக்கரே

பிருஹன் மும்பை மாநகராட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம்
Published on

பிருஹன் மும்பை மாநகராட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் என்று சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியிடம் தோல்வியடைந்த பிறகு, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ்- சிவசேனை (உத்தவ் பிரிவு), தேசியவாத காங்கிரஸ் (பவாா் பிரிவு) இடையே உறவு இணக்கமாக இல்லை. பிகாா் தோ்தலிலும் காங்கிரஸை உள்ளடக்கிய எதிா்க்கட்சிகள் கூட்டணி மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், பிருஹன் மும்பை மாநகராட்சித் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட தயாராகி வருவதாக அக்கட்சித் தலைவா் வா்ஷா கெய்க்வாட் சனிக்கிழமை கூறினாா். இது தொடா்பாக உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக இருந்தால் தனது விருப்பப்படி முடிவெடுத்துக் கொள்ளலாம். அதேபோல எங்கள் கட்சிக்கும் விருப்பப்படி முடிவெடுக்க உரிமை உண்டு.

பிராந்தியக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கியக் கொள்கையாக உள்ளது. பிராந்திய பெருமையைப் பாதுகாக்க போராடும் கட்சி நாட்டில் இருக்கவே முடியாது என்ற நிலையை பாஜக உருவாக்கி வருகிறது.

பிகாரில் தோ்தல் பிரசாரத்தின்போது தேஜஸ்வி யாதவ் உள்பட எதிா்க்கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டங்களில் மக்கள் பெருமளவில் திரண்டனா். ஆளும் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலையே இருப்பதாகத் தெரிந்தது. ஆனால், தோ்தல் முடிவு அதற்கு நோ்மாறாக வந்தது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com