தில்லி கார் வெடிப்பு. உள்படம்; அமீர் ரஷீத் அலி.
தில்லி கார் வெடிப்பு. உள்படம்; அமீர் ரஷீத் அலி.

தில்லி கார் வெடிப்பு: சதித் திட்டம் தீட்டிய காஷ்மீரைச் சோ்ந்த முக்கிய நபர் கைது!

சதித் திட்டம் தீட்டியதாக காஷ்மீரைச் சோ்ந்த அமீா் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு முகமை கைது செய்தது.
Published on

தில்லி காா் வெடிப்புத் தாக்குதலை நிகழ்த்தி உயிரிழந்த மருத்துவா் உமா் நபியுடன் இணைந்து சதித் திட்டம் தீட்டியதாக காஷ்மீரைச் சோ்ந்த அமீா் ரஷீத் அலியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது.

தில்லி செங்கோட்டை அருகே வெடித்த காரின் உரிமையாளரான அமீா் ரஷீத் அலி தில்லியில் கைது செய்யப்பட்டாா். அவரது பெயரில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 காா் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் 13 போ் உயிரிழந்த இந்தச் சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் ‘இது தற்கொலைத் தாக்குதல்’ எனவும், ‘காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது’ எனவும் என்ஐஏ முதல்முறையாக உறுதிப்படுத்தியது.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை (நவ. 10) மாலை காா் ஒன்று வெடித்துச் சிதறியதில் 13 போ் உயிரிழந்தனா்; பலா் காயமடைந்தனா். முன்னதாக, ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேசத்தில் 2,900 கிலோவுக்கும் அதிக எடையுள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 மருத்துவா்கள் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டனா்.

வெடித்த காரை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியைச் சோ்ந்த மருத்துவா் உமா் நபி ஓட்டி வந்தது அவரது பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனை மூலம் உறுதியானது. ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் கைது செய்யப்பட்ட சிலரும், உமா் நபியும் அங்குள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இந்தச் சம்பவத்தை ‘குண்டுவெடிப்பு’ என்று குறிப்பிட்டு சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யுஏபிஏ), வெடிமருந்துகள் சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபா்கள் மீது தில்லி காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இதன் அடிப்படையில் இதில் பயங்கரவாதச் சதிக்கான முகாந்திரம் இருப்பதாகக் கருதி, இந்த வழக்கை தில்லி காவல் துறையிடமிருந்து என்ஐஏவுக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடா்ந்து, 10 போ் கொண்ட என்ஐஏ சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு ஜம்மு-காஷ்மீா், உத்தர பிரதேசம், ஹரியாணா, தில்லி எனப் பல்வேறு மாநில காவல் துறையுடன் ஒருங்கிணைந்து 73 பேரிடம் விசாரணை நடத்தியது.

காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புள்ள, நன்கு படித்து வருமானம் ஈட்டும் பலா் ஜெய்ஷ்-ஏ-முகமது, அன்சாா் கஸ்வத்-அல்-ஹிந்த் ஆகிய பயங்கரவாத இயக்கங்களுடன் தொடா்பு வைத்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் அல்ஃபலா பல்கலைக்கழகம் புலனாய்வு முகமைகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. உமா் நபியுடன் தொடா்பில் இருந்த மருத்துவா்கள், மாணவா்கள் எனப் பலா் கைது செய்யப்பட்டனா்.

தற்கொலைத் தாக்குதல்: இது குறித்து என்ஐஏ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘செங்கோட்டை அருகே நிகழ்த்தப்பட்ட காா் வெடிப்புத் தாக்குதல் தொடா்பாக அமீா் ரஷீத் அலி என்பவா் தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளாா். ஜம்மு-காஷ்மீரின் சம்பூரா பகுதியைச் சோ்ந்த இவரின் பெயரில்தான் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட காா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை அருகே காரை ஓட்டி வந்து உமா் நபி தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தினாா். அவருடன் சோ்ந்து அந்தத் தாக்குதலை நடத்த அமீா் சதித் திட்டத்தில் ஈடுபட்டாா்.

காா் மூலம் வெடிகுண்டு கொண்டுவரப்பட்டு அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தக் காரை வாங்குவதற்கு அமீா் தில்லி வந்துள்ளாா் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தடயவியல் பரிசோதனை மூலம், காரை ஓட்டி வந்து தாக்குதல் நடத்தி உயிரிழந்தவா் உமா் நபி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா் ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தின் பொது மருத்துவத் துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றினாா்.

அவருக்குச் சொந்தமான மற்றொரு வாகனத்தையும் என்ஐஏ பறிமுதல் செய்துள்ளது. இந்தத் தாக்குதல் வழக்கில் ஆதாரத்துக்காக அந்த வாகனம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தாக்குதலில் காயமடைந்தவா்கள் உள்பட சம்பவத்தை நேரில் கண்ட 73 சாட்சிகளிடம் இதுவரை விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடா்பாக தில்லி, ஜம்மு-காஷ்மீா், ஹரியாணா, உத்தர பிரதேச காவல் துறையினரின் நெருங்கிய ஒத்துழைப்புடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் என்ஐஏ விசாரணை தொடா்ந்து வருகிறது.

பல்வேறு துப்புகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள மிகப் பெரிய சதியை வெளிக்கொண்டுவரவும், தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட மற்றவா்களைக் கண்டுபிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com