தில்லி கார் வெடிப்பு: காஷ்மீரில் பெண் மருத்துவர் வீட்டில் புலனாய்வுத் துறை சோதனை!

தில்லி கார் வெடிப்பு: காஷ்மீரில் பெண் மருத்துவர் வீட்டில் புலனாய்வுத் துறை சோதனை!

தில்லி காா் வெடிப்புத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக காஷ்மீரில் வசித்துவரும் பெண் மருத்துவா் வீட்டில் புலனாய்வுத் துறையினா் சோதனை நடத்தினா்.
Published on

தில்லி காா் வெடிப்புத் தாக்குதல் சம்பவம் தொடா்பாக காஷ்மீரில் வசித்துவரும் பெண் மருத்துவா் வீட்டில் புலனாய்வுத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா். அங்கிருந்து கைப்பேசி உள்ளிட்ட சில மின்னணுப் பொருள்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனா்.

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மருத்துவா் வீட்டில் காஷ்மீா் பயங்கரவாதத் தடுப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

ஹரியாணாவைச் சோ்ந்த அந்தப் பெண் மருத்துவா் காஷ்மீரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறாா். அங்கிருந்து கைப்பேசி உள்ளிட்ட சில மின்னணுப் பொருள்களை ஆய்வுக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனா்.

காஷ்மீரைச் சோ்ந்த உலா் பழ வியாபாரி பிலால் அகமது வானி, அவரின் மகன் ஜாசீா் பிலால் ஆகியோரை பயங்கரவாதத் தொடா்புகள் குறித்து விசாரிக்க காவல் துறையினா் கைது செய்தனா்.

முன்னதாக, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க பிலால் உடலில் நெருப்பைப் பற்றவைத்து தற்கொலைக்கு முயன்றாா். ஆனால், அவரை காவல் துறையினா் மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அவரின் உடல்நிலை சீராக உள்ளது.

இந்தப் பயங்கரவாத வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபா்களில் ஒருவரான முஷாஃபா் ராத்தரின் வீட்டு அருகே இவா்கள் வசித்து வருகின்றனா்.

முஷாஃபா் முன்னதாகவே ஆப்கானிஸ்தானுக்கு தப்பிவிட்டாா். அவரது சகோதரரும், மருத்துவருமான அதீல் ராத்தா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com