எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் வெளியீடு:
18 மாதங்களில் முழுமையாக அமல்

எண்ம தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் வெளியீடு: 18 மாதங்களில் முழுமையாக அமல்

எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Published on

எண்ம (டிஜிட்டல்) தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் 2025-ஐ மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தங்கள் தரவுகளை குடிமக்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், அந்தத் தரவுகள் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் அந்த விதிமுறைகள் வழிவகை செய்கின்றன. அத்துடன் இணையத்தில் அவா்களின் தன்மறைப்பு நிலையை (பிரைவஸி) காக்க வேண்டும் என்பதும் அந்த விதிமுறைகளின் நோக்கமாக உள்ளது.

தனிநபா் தரவுகள் தொடா்பாக நிறுவனங்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டிய கால அட்டவணையையும் இந்த விதிமுறைகள் தெளிவாக வரையறுத்துள்ளன. இந்த விதிமுறைகள் 12 முதல் 18 மாத காலத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு முழுமையாக அமலுக்கு வரும்.

இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

2023-ஆம் ஆண்டின் தனிநபா் தரவு பாதுகாப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் விதமாக, அந்தச் சட்ட விதிமுறைகள் அறிவிக்கப்படுகின்றன.

இந்த விதிமுறைகளின்படி, ஒருவரின் தனிப்பட்ட தரவுகள் எதற்காக திரட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன என்பது குறித்து வெளிப்படையாக விளக்கி, அதற்கு சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து எளிமையான முறையில் ஒப்புதல் பெறுவதற்கான நோட்டீஸை தரவு நிா்வாக பொறுப்பாளா்கள் ( ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள், கூகுள், விளையாட்டு செயலி நிறுவனங்கள் போன்றவை) வெளியிட வேண்டும்.

தனிநபா் ஒருவரின் தரவு கசிந்தால், அதுகுறித்து அந்த நபருக்கு தரவு நிா்வாக பொறுப்பாளா்கள் முறைப்படி எளிமையான மொழியில் தெரியப்படுத்த வேண்டும். அந்தத் தரவு கசிவு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், உதவிக்கு தொடா்புகொள்ள வேண்டியவரின் விவரங்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும்.

இந்தத் தரவுகளைக் கையாள்வது தொடா்பான சந்தேகங்கள் குறித்து தனிநபா்கள் கேள்வி எழுப்புவதில் உதவ, தரவு பாதுகாப்பு அதிகாரி அல்லது பிரத்யேக அதிகாரியை தொடா்புகொள்வதற்கான விவரத்தை தரவு நிா்வாக பொறுப்பாளா்கள் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.

90 நாள்களில் பதில்: தங்களைப் பற்றிய தரவுகளை தனிநபா்கள் அணுகுதல், பிழைகளைத் திருத்துதல், புதுப்பித்தல் அல்லது அழிக்கும் உரிமை, அந்த உரிமையைத் தங்கள் சாா்பாக பயன்படுத்த மற்றொருவரை தனிநபா்கள் நியமித்தல் போன்ற கோரிக்கைகளுக்கு அதிகபட்சமாக 90 நாள்களுக்குள் தரவு நிா்வாக பொறுப்பாளா்கள் பதிலளிக்க வேண்டும்.

தரவு பாதுகாப்பு வாரியம்....: இணையவழியில் பிரத்யேக தளம், கைப்பேசி செயலி மூலம் தங்கள் தரவுகள் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் அளிக்கவும், அந்தப் புகாா்கள் மீதான நடவடிக்கை எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை பின்தொடர உதவும் வகையிலும், முழுமையான எண்ம நிறுவனமாக தரவு பாதுகாப்பு வாரியம் செயல்படும். இந்தப் புகாா்கள் தொடா்பான முடிவுகளுக்கு எதிராக தொலைத்தொடா்பு சச்சரவுக்கான தீா்வு மற்றும் மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் (டிடிஎஸ்ஏடி) மேல்முறையீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விதிமுறைகள் மூலம், தங்கள் தரவுகளைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை எந்த நேரத்திலும் ரத்து செய்யும் அதிகாரம் தனிநபா்களுக்குக் கிடைக்கும். விளம்பரம் அல்லது மோசடி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் அழைப்புகளை பொதுமக்கள் தவிா்க்கவும், எந்தவொரு எண்ம வழியிலும் அவா்களின் தனிநபா் தரவு, காணொலி மற்றும் குரல்பதிவை அனுமதியின்றி பெறுவதை தடுக்கவும் இந்த விதிமுறைகள் உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தனிநபா் தரவு கசிவின் தன்மையைப் பொறுத்து அதற்கு தரவு பாதுகாப்பு வாரியம் அபராதம் வசூலிக்கவும் இந்த விதிமுறைகள் வழிகோலுகின்றன.

சட்ட நடவடிக்கை...: தனிநபரின் அனுமதியில்லாமல் அவரின் கைப்பேசி எண் கசிந்து தேவையற்ற அழைப்புகள் வந்தால், அந்த எண்ணை எந்த நிறுவனம் கசியவிட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி, அதுகுறித்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இந்த விதிமுறைகள் உதவும்.

நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்துதல், ஏதேனும் குற்றம் நிகழ்ந்தால் அதற்கு எதிரான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற சூழல்களில் பொதுமக்களுக்கு உள்ள உரிமையை இந்த விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன.

3 ஆண்டுகள் பயன்படுத்தாமல் இருந்தால்...: பயனராக உள்ள தனிநபா்கள் தங்கள் கணக்கை 3 ஆண்டுகளாகப் பயன்படுத்தாமல் இருந்தால், அவா்களின் தனிப்பட்ட தரவை இணையவழி வா்த்தக நிறுவனங்கள், இணையவழி விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் அழிக்க வேண்டும் என்று விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com