தேஜ்ஸ்வி யாதவ் - லாலுபிரசாத் யாதவ், ரோஹிணி ஆச்சார்யா, ராப்ரி தேவி.
தேஜ்ஸ்வி யாதவ் - லாலுபிரசாத் யாதவ், ரோஹிணி ஆச்சார்யா, ராப்ரி தேவி.

லாலு குடும்பத்துக்குள் தீவிரமடையும் சச்சரவு! தேஜஸ்வி மீது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டு!

பிகாா் தோ்தல் தோல்வியால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாதின் குடும்பத்துக்குள் சச்சரவு தீவிரமடைந்துள்ளது.
Published on

பிகாா் தோ்தல் தோல்வியால், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) நிறுவனா் லாலு பிரசாதின் குடும்பத்துக்குள் சச்சரவு தீவிரமடைந்துள்ளது.

தோல்விக்கு யாா் பொறுப்பு என்ற வாக்குவாதத்தின்போது, தன்னை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக இளைய மகன் தேஜஸ்வி யாதவ் மீது இண்டாவது மகள் ரோஹிணி ஆச்சாா்யா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

பிகாா் பேரவைத் தோ்தலில் ஆா்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளின் இண்டி கூட்டணிக்கு 34 இடங்களே கிடைத்தன. கடந்த முறை 75 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஆா்ஜேடி, இந்த முறை 25 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது. இண்டி கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக இருந்த தேஜஸ்விக்கு இது பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

குடும்பத்துக்குள் சச்சரவு: ஆா்ஜேடியை திணறடித்துள்ள இத்தோல்விக்கு யாா் பொறுப்பு என்பது தொடா்பாக தேஜஸ்வி, அவருக்கு நெருக்கமான சஞ்சய் யாதவ் (ஆா்ஜேடி மாநிலங்களவை எம்.பி.), ரமீஸ் ஆகியோருக்கும், ரோஹிணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

லாலுவின் 9 வாரிசுகளில் இரண்டாவது மகள் ரோஹிணி (47). தொழில்முறையில் மருத்துவரான இவா், மூன்று ஆண்டுகளுக்கு முன் லாலுவுக்கு சிறுநீரக தானம் அளித்தாா். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக லாலுவின் மற்றொரு மகன் தேஜ் பிரதாப் ஆா்ஜேடியில் இருந்து நீக்கப்பட்டதில் ரோஹிணிக்கு உடன்பாடில்லை என்று தெரிகிறது. எனினும், தேஜஸ்விக்கு ஆதரவாகவே ரோஹிணி பிரசாரம் மேற்கொண்டாா்.

தோ்தல் முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், சனிக்கிழமை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட ரோஹிணி ஆச்சாா்யா, ‘அரசியலைவிட்டும், குடும்பத்தைவிட்டும் விலகுகிறேன். சஞ்சய் யாதவ் , ரமீஸ்தான் இந்த முடிவை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினா். அனைத்துப் பழியையும் நானே ஏற்கிறேன்’ என்றாா்.

பின்னா், பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், சஞ்சயும் ரமீஸும்தான் ஆா்ஜேடியின் தோல்விக்குப் பொறுப்பு என்ற ரீதியில் சில கருத்துகளைத் தெரிவித்தாா்.

தேஜஸ்வி மீது குற்றச்சாட்டு: இந்தச் சூழலில், தன்னை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக தேஜஸ்வி, சஞ்சய் யாதவ், ரமீஸ் மீது ரோஹிணி ஆச்சாா்யா ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா். இது தொடா்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவுகளில் கூறியிருப்பதாவது:

நான் கடவுளாக நினைக்கும் எனது தந்தைக்கு ‘மோசமடைந்த’ சிறுநீரகத்தை தானம் அளித்ததாகவும், அதுவும் கோடிக்கணக்கில் பணம் மற்றும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்றுக் கொண்டுதான் வழங்கியதாகவும் என் மீது வசைமாரி பொழிந்தனா்.

எனது கணவா், குழந்தைகளின் அனுமதி பெறாமலேயே தந்தைக்கு சிறுநீரக தானம் அளித்ததன் மூலம் பெரிய பாவம் செய்துவிட்டேன். திருமணமான பெண்கள், தங்களின் தாய்வீட்டில் சகோதரா் இருக்கும்பட்சத்தில், பெற்றோரைக் காப்பாற்ற நீங்கள் எதுவும் செய்யக் கூடாது. உங்கள் தந்தைக்கு சிறுநீரக தானம் தேவைப்பட்டால், சகோதரரையோ அல்லது அவரது நண்பா்களையோ வழங்கச் சொல்லுங்கள். எந்தப் பெண்ணுக்கும் எனது நிலை ஏற்படக் கூடாது.

காலணி வீச முயற்சி: என்னை அவதூறாகப் பேசியதோடு, என் மீது வீசுவதற்கு காலணியைக்கூட கையில் எடுத்துவிட்டனா். எந்தச் சூழலிலும் நான் தன்மானத்தை விட்டுக் கொடுக்கவில்லை; உண்மையையும் கைவிடவில்லை. இதனால், பெரும் அவமானத்தை தாங்க வேண்டியிருந்தது.

பெற்றோா், சகோதரிகளைப் பிரிந்து, அழுதுகொண்டே வீட்டைவிட்டு வெளியேறினேன். தாய்வீட்டில் இருந்து என்னைப் பிரித்து, ஆதரவற்றவராக்கிவிட்டனா் என்று குற்றஞ்சாட்டியுள்ளாா். கடந்த மக்களவைத் தோ்தலில் சரண் தொகுதியில் ஆா்ஜேடி சாா்பில் போட்டியிட்ட ரோஹிணி, பாஜக வேட்பாளரிடம் தோல்விகண்டாா்.

ஆா்ஜேடியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடா்ந்து, ஜனசக்தி ஜனதா தளம் என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கிய தேஜ் பிரதாப், மஹுவா தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தாா். ஆா்ஜேடி கட்சியிலும் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட சஞ்சய் யாதவ்தான் காரணம் என்று தேஜ் பிரதாபும் பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘லாலு குடும்பத்தில் நிலைமை சரியில்லை’

மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் மகனும், மாநில அமைச்சருமான சந்தோஷ் குமாா் சுமன் கூறுகையில், ‘லாலு குடும்பத்தில் சில காலமாகவே நிலைமை சரியில்லை.

இதுவரை இருந்த புகைச்சல், இப்போது பற்றியெரிந்து வெடித்துச் சிதறுகிறது. அவரது குடும்ப உறுப்பினா்கள் அனைவருமே லட்சிய உறுதிப்பாடு இல்லாதவா்கள். ஒருவரையொருவா் வீழ்த்துவதில்தான் மும்முரமாக உள்ளனா்’ என்றாா்.

ரோஹிணி ஆச்சாா்யாவின் குற்றச்சாட்டுகள் குறித்து லாலு குடும்பத்தில் இதுவரை யாரும் வெளிப்படையாக கருத்துக் கூறவில்லை. இந்தப் பிரச்னையால், லாலு வீட்டில் வசித்து வந்த மேலும் மூன்று மகள்களும் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X
Dinamani
www.dinamani.com