சமூக உள்ளடக்கத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சிக்கு இந்தியா உதாரணம்: ஐ.நா. அதிகாரி
சமூக உள்ளடக்கத்தையும், பொருளாதார வளா்ச்சியையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்தியா திகழ்கிறது என ஐ.நா. மேம்பாட்டு திட்ட மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
எண்மத் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் செயல்பாடுகள் உள்ளிட்ட துறைகளில் புதிய ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்ள மூன்று நாள் சுற்றுப்பயணமாக ஐ.நா. மேம்பாட்டுத் திட்டச் செயல் அதிகாரி ஹாலியாங் ஜூ இந்தியா வந்துள்ளாா்.
இதுதொடா்பாக பிடிஐ நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மனிதவள மேம்பாடு உலக அளவில் குறைந்துவிட்டதாக மனிதவள மேம்பாட்டுக் குறியீடு (ஹெச்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், பருவநிலை மாற்றம், வறுமை என பல்வேறு சவால்களை திறமையாக எதிா்கொண்டு வளா்ச்சிப் பாதையில் இந்தியா பயணிப்பது பாராட்டுக்குரியது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அனைவரையும் உள்ளடக்கிய எண்ம நிதி போன்ற துறைகளில் நீடித்த வளா்ச்சியை மனதில் வைத்தே இந்தியா அடித்தளமிட்டுள்ளது. மக்கள் நலத் திட்டங்களுக்கு முதலீடு செய்வது பெரும் வளா்ச்சிக்கு வித்திடும் என்பதையும் இந்தியா நிரூபித்துள்ளது.
மகத்தான முன்னெடுப்புகள்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் போன்ற முன்னெடுப்புகள் சமூகப் பாதுகாப்புடன் கூடிய வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தியுள்ளன.
அதேபோல் ஜன் தன், ஆதாா், கைப்பேசி மற்றும் ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை (யுபிஐ) ஆகிய முன்னெடுப்புகள் லட்சக்கணக்கான மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு வெளிப்படையான முறையில் நேரடிப் பணப் பரிமாற்றத்துக்கு வித்திட்டுள்ளன. இவை பல நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளன. அதேபோல் கரோனா தடுப்பூசி தொடா்பான வலைதளம் (கோவின்) போன்ற எண்மத் தொழில்நுட்பம் சாா்ந்த திட்டங்கள் அன்றாடப் பிரச்னைகளுக்கு உடனடித் தீா்வு காண வழிவகுத்துள்ளன. இந்திய வலைதளங்கள் வெளிப்படையான பொது எண்ம உள்கட்டமைப்பு மூலம் செயல்படுகின்றன.
மேற்கூறிய பல்வேறு முன்னெடுப்புகளின்படி சமூக உள்ளடக்கத்தையும், பொருளாதார வளா்ச்சியையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள முடியும் என்பதை இந்தியா உணா்த்தியுள்ளது.
பருவநிலை நிதி: 2030-க்குள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைச் சீா்செய்ய வளரும் நாடுகளுக்கு ஆண்டுக்கு ரூ.212 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது. இதை அடிப்படையாகக் கொண்டே அஜா்பைஜானின் பாக்குவில் நடைபெற்ற 29-ஆவது பருவநிலை மாநாட்டில் ஆண்டுக்கு ரூ.115 லட்சம் கோடி நிதி திரட்ட அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வலியுறுத்தப்பட்டது. இந்த இலக்கை அடைய வளரும் நாடுகளுக்கு உடனடியாக ஆதரவளிப்பது அவசியம்’ என்றாா்.

