

ஜம்மு-காஷ்மீரில் குற்றப் பின்னணி இல்லாத, பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லாத இளைஞர்களைத் தேர்வு செய்ய பயங்கரவாத அமைப்புகள் விரும்புவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீநகரில் அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் குற்றப் பின்னணி இல்லாத இளைஞர்களைத் தேர்வு செய்யவே பயங்கரவாத அமைப்புகள் விரும்புகின்றன. அதேபோன்று பிரிவினைவாத அமைப்புகளுடன் தொடர்பு இல்லாத இளைஞர்களே அவற்றின் தேர்வாக உள்ளது.
இது பயங்கரவாத அமைப்புகள் 20 ஆண்டுகளுக்கு முன் ஆள்தேர்வு செய்யப் பயன்படுத்திய நடைமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடாகும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய நபர்களே பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர்.
தற்போது "ஒயிட் காலர்' பயங்கரவாதிகள் என்ற புதிய சிந்தனைப்படி ஆள்தேர்வு செய்ய பயங்கரவாத அமைப்புகள் முயற்சிக்கின்றன. இதன் மூலம் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸôரின் விசாரணை வளையத்தில் இருந்து தப்பிக்க முடியும் என்று அவை கருதுகின்றன.
தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களான டாக்டர் அடீல் ராத்தர், டாக்டர் முசாஃபர் ராத்தர், டாக்டர் முசம்மில் கனே ஆகியோருக்கு குற்றப் பின்னணியும் இல்லை; அவர்கள் கடந்த காலத்தில் தேசவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை. கைது செய்யப்பட்டுள்ள இந்த இளைஞர்களின் குடும்பத்தாரும் கடந்த காலங்களில் எந்தப் பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கவில்லை.
தில்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ஆம் தேதி வெடித்துச் சிதறிய காரை ஓட்டிச் சென்ற டாக்டர் உமர் நபிக்கு பழைய குற்றப் பின்னணி ஏதுமில்லை. இந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்தார் மீதும் எந்தக் குற்ற வழக்குகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீரிலும் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தானிலிருந்தும் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் தற்போது நன்கு படித்த இளைஞர்களையே தேர்வு செய்ய விரும்புகின்றன. டாக்டர்கள் அடங்கிய குழுவானது பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் என்பது நாம் இதுவரை சிந்தித்துப் பார்த்திராத விஷயமாகும் என்றார் அவர்.
ஜம்மு-காஷ்மீரில் கண்காணிப்பு கேமரா பதிவுகளைத் துல்லியமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்ட ஆரிஃப் நிசார் தார், யாசிர்-உல்-அஷ்ரஃப், மக்சூத் அகமது தார் உள்ளிட்ட மூன்று பேரை போலீஸôர் கைது செய்தனர். இந்த மூன்று பேர் மீது பாதுகாப்புப் படையினருக்கு எதிராக கல்வீச்சில் ஈடுபட்டதாக கடந்தகாலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஷோபியான் பகுதியைச் சேர்ந்த மதபோதகரான மௌல்வி இர்ஃபான் அகமது கைது செய்யப்பட்டார். அவர் பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸாரை அச்சுறுத்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை விநியோகம் செய்தது தெரியவந்தது. டாக்டர்களாக உள்ள இளைஞர்களை அவர் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக மூளைச்சலவை செய்து வந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.