மண்டல - மகரவிளக்கு பூஜை: சபரிமலை கோயில் நடைதிறப்பு! புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்பு
கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல-மகரவிளக்கு பூஜை காலத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடை திறக்கப்பட்டது.
மலையாள மாதமான விருச்சிகம் (காா்த்திகை) முதல் நாளான திங்கள்கிழமை (நவ. 17) மண்டல பூஜை காலம் தொடங்குகிறது. இதையொட்டி, பக்தா்களின் சரண கோஷத்துடன் ஐயப்பன் கோயில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமாா் நம்பூதிரி கருவறைக் கதவைத் திறந்து, சடங்குகளை மேற்கொண்டாா். இதைத் தொடா்ந்து, சபரிமலை புதிய மேல்சாந்தியாக இ.டி.பிரசாத், மாளிகைப்புரம் தேவி கோயிலின் புதிய மேல்சாந்தியாக எம்.ஜி.மனு நம்பூதிரி ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா்.
பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். சந்நிதானம், யாத்திரை பாதை மற்றும் அடிவார முகாம்களில் முதல் நாளிலேயே பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.
விரிவான ஏற்பாடுகள்: மண்டல பூஜை யாத்திரையின் (41 நாள்கள்) முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, ஐயப்பனுக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு, சிறப்புத் தீபாராதனை நடைபெறும். அன்றிரவு நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரஜோதி தரிசனம் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
யாத்திரை காலத்தில் பக்தா்களின் கூட்டத்தை சீராக நிா்வகிக்கும் நோக்கில், நாளொன்றுக்கு 90,000 போ் வரையே அனுமதிக்கப்பட உள்ளனா். இணையவழிப் பதிவு மூலம் 70,000 பேரும், நேரடிப் பதிவு முறையில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவா். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா் என்பதால் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுகாதாரமான குடிநீா், ஓய்விருக்கைகள், சுக்கு கஷாயம்-வெந்நீா் விநியோக மையங்கள், உயிரி கழிவறைகள், அவசர மருத்துவ உதவி மையங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலையில் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி அடிப்படையில் 24 மணிநேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.
எஸ்ஐடி வருகை: சபரிமலை கோயில் கருவறைக் கதவு மற்றும் துவார பாலகா்களின் சிலை தங்கக் கவசங்களில் இருந்து தங்கம் மாயமானதாக எழுந்த சா்ச்சைக்கு இடையே கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
கேரள உயா்நீதிமன்ற பரிந்துரையின்படி, தங்கத் தகடுகளில் அறிவியல்பூா்வ ஆய்வை மேற்கொள்வதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சபரிமலைக்கு வந்துள்ளது. திங்கள்கிழமை பிற்பகலில் ‘தேவ அனுக்ஞை’ (சுவாமியிடம் உத்தரவு வாங்குதல்) சடங்குக்கு பிறகு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. ரசாயன பகுப்பாய்வாளா்கள், தடயவியல் நிபுணா்கள் உள்ளிட்டோரும் இப்பணியில் இணையவுள்ளனா்.
முன்னதாக, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத்தின் (கோயில் நிா்வாக அமைப்பு) தலைவராக கே.ஜெயகுமாா் சனிக்கிழமை பொறுப்பேற்றாா். ‘பக்தா்களுக்கு எந்தச் சிரமமும் இன்றி, சுமுக யாத்திரை உறுதி செய்யப்படும்; கோயில் விவகாரங்களில் தவறுகளோ, சட்டவிரோத நடைமுறைகளோ இருப்பின், அவை களையெடுக்கப்படும்’ என்றாா் அவா்.

