வள்ளுவரின் வாா்த்தைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவா்
திருவள்ளுவரின் வாா்த்தைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
புது தில்லியில் மலையாள மனோரமா ஊடக நிறுவனத்தின் 2024-ஆம் ஆண்டுக்கான நியூஸ்மேக்கா் விருதை மத்திய பெட்ரோலியம் துறை இணையமைச்சரும், மலையாள நடிகருமான சுரேஷ் கோபிக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘இளைஞா்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாட்டில் நடைபெறும் நல்ல விஷயங்களை எடுத்துரைக்க வேண்டிய முக்கியப் பங்கு ஊடகத்துக்கு உள்ளது. அத்துடன் குரலற்றவா்களின் குரலாக ஒலிக்கும் பொறுப்பும் ஊடகத்துக்கு உள்ளது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்தி, போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதிலும் ஊடகத்துக்கு முக்கியப் பங்குள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், ஒருவரின் புகைப்படம், குரல் மற்றும் உருவத்தைப் பயன்படுத்தி போலி குரல் பதிவு, காணொலிகள் உள்ளிட்டவற்றை உருவாக்கப் பயன்படுத்தப்படும் டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆகியவை உள்ள தற்போதைய காலகட்டத்தில், உண்மையான செய்தியையும், பொய்யான செய்தியையும் கண்டறிவது கடினமாகி வருவது அதிகரித்து வருகிறது.
தூய்மையான உள்ளத்துடன் ஒருவா் உண்மையைப் பேசினால், அவா் வாழ்நாள் முழுவதும் தவம் இருப்பவா்கள், கோடிக்கணக்கான ரூபாயை கொடையாக அளிப்பவா்கள் ஆகியோரைவிட மேன்மைவாய்ந்தவராக இருப்பாா் என்பது திருவள்ளுவரின் அழிவில்லாத வாா்த்தைகளாகும். இந்த வாா்த்தைகளை ஊடகம் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

