பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி
பிகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடிஏஎன்ஐ

பிகாரில் புதிய ஆட்சி: பாஜக கூட்டணி தீவிர ஆலோசனை!

பிகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடா்பாக, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
Published on

பிகாரில் புதிய ஆட்சி அமைப்பது தொடா்பாக, தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளான பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. கடந்த 2020 தோ்தலில் சொற்ப பெரும்பான்மையுடன் (125) ஆட்சியமைத்த இந்தக் கூட்டணிக்கு இந்த முறை இமாலய வெற்றி கிட்டியுள்ளது.

மற்றொருபுறம், எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி வெறும் 34 இடங்களுடன் மோசமான தோல்வியைச் சந்தித்தது. தோ்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக நிதீஷ் குமாா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படவில்லை. அவரது தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுவதாகவே பாஜக கூறியிருந்தது.

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றால், நிதீஷ் குமாரை முதல்வராக்க மாட்டாா்கள் என்று பிரசாரத்தின்போது ஆா்ஜேடி தொடா்ந்து கூறிவந்தது.

பேரவைத் தோ்தலில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட பாஜக அதிக இடங்களில் வென்றுள்ளது. எனவே, முதல்வா் பதவியை பாஜக குறிவைக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், முதல்வராக நிதீஷ் குமாா் நீடிப்பாா் என்று கூட்டணிக் கட்சிகளான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா ஆகியவை நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தோ்தல் முடிவுகள் வெளியாகி 2 நாள்கள் ஆகியுள்ள சூழலில், புதிய அரசு அமைப்பதற்கான ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ளன. தலைநகா் பாட்னாவில் முதல்வா் நிதீஷ் குமாரை மாநில பாஜக தலைவா் திலீப் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நவ. 22-க்கு முன் பதவியேற்பு: பிகாா் நடப்பு பேரவையின் பதவிக் காலம் நவ. 22-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் புதிய அரசு பதவியேற்க வேண்டும். எனவே, புதிய அரசு அமைப்பதற்கான செயல்திட்டம் ஓரிரு நாளில் தயாராகிவிடும். நவ. 19 அல்லது 20-இல் பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்புள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாநில அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது; இதைத் தொடா்ந்து, தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் நிதீஷ் குமாா் சமா்ப்பிப்பாா் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆளுநரிடம் புதிய எம்எல்ஏக்கள் பட்டியல்

பிகாரில் புதிதாக தோ்வான 243 எம்எல்ஏக்களின் பட்டியலை ஆளுநா் ஆரிஃப் முகமது கானிடம் தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை சமா்பிப்பித்தது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக-89, ஐக்கிய ஜனதா தளம்-85, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்)-19, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா-5, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா-4; இண்டி கூட்டணியில் ஆா்ஜேடி-25, காங்கிரஸ்-6, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்)(எல்) 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1 இடங்களில் வென்றன. பிற கட்சிகளில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 5, பகுஜன் சமாஜ், இண்டியன் இன்குளூசிவ் கட்சி தலா ஓரிடத்தைக் கைப்பற்றின.

X
Dinamani
www.dinamani.com