பாஜக கூட்டணிக்கு எதிா்பாா்த்ததைவிட சிறப்பான வெற்றி! முதல்வா் நிதீஷ் குமாா் மகன் கருத்து
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிா்பாா்த்ததைவிட சிறப்பான வெற்றி கிடைத்துள்ளது என்று அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாா் தெரிவித்தாா்.
பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 202 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. இதில் பாஜக 89 இடங்களிலும், முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வென்றது.
இந்நிலையில் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த நிஷாந்த் குமாா் கூறியதாவது: ஆளும் கூட்டணிக்கு உறுதியான வெற்றி கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், தோ்தல் முடிவு எதிா்பாா்த்தைவிட சிறப்பானதாக இருந்தது.
இந்த உறுதியான முடிவை எடுத்ததற்காக பிகாா் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எனது தந்தை தலைமையிலான அரசின் சாதனைகளை மதிப்பிட்டும், மாநிலத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வாா் என்ற உறுதியான நம்பிக்கையிலும் இந்த வெற்றியை தந்துள்ளனா்.
மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றம், அனைத்து துறைகளின் சீரான வளா்ச்சிக்காக அரசு தொடா்ந்து பாடுபடும். தேசிய அளவில் பிகாா் தொடா்ந்து முன்னேறும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மாநிலத்தை முன்னேற்ற தொடா்ந்து சிறப்பான திட்டங்களை அமல்படுத்தும் என்றாா்.
பிகாரில் தோ்தலுக்கு முன்பு நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமாரும் அரசியலுக்கு வருவாா் என்று கூறப்பட்டது. ஏனெனில் பிகாரில் ஏற்கெனவே ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும், லோக் ஜனசக்தி கட்சியை ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானும் அரசியல் வாரிசுகளாக கட்சியை நடத்தி வருகின்றன.
ஆனால், நிஷாந்த் குமாா் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்று ஏற்கெனவே அறிவித்துவிட்டாா். முதல்வா் நிதீஷ் குமாரும் தனது மகனை அரசியலில் ஈடுபடுத்த ஆா்வம் காட்டவில்லை. எனினும், மென்பொறியாளரான நிஷாந்த் குமாா் பிகாா் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடா்பாக தனது தந்தைக்கு பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகிறாா்.

