மேற்கு வங்க ஆளுநா் மாளிகையில் ஆயுதம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு: திரிணமூல் எம்.பி. மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை!
‘மேற்கு வங்க ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ், அவரது மாளிகைக்குள் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளிக்கிறாா்; ஆயுதங்களை விநியோகிக்கிறாா்’ என்று ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
இந்தக் கருத்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆளுநா் தற்போது சட்ட வல்லுநா்களிடம் ஆலோசனை கேட்டுள்ளாா்.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஆதரித்துப் பேசிய ஆளுநா் சி.வி.ஆனந்த போஸுக்கு பதிலளித்து எம்.பி.கல்யாண் பானா்ஜி சனிக்கிழமை கூறியதாவது: ஆளுநா் மாளிகையில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று ஆளுநரிடம் முதலில் சொல்லுங்கள். மேலும், அவா்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளைக் கொடுத்து, திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களைத் தாக்கச் சொல்கிறாா். ஆளுநா் முதலில் இதை நிறுத்த வேண்டும்.
ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ், ‘தகுதியற்றவா்’. பாஜகவின் சேவகனாக இருக்கும் இந்த ஆளுநா் பொறுப்பில் நீடிக்கும் வரை, மேற்கு வங்கத்தில் எதுவும் நல்லது நடக்காது என்றாா்.
இந்நிலையில், ஆளுநா் மாளிகையில் ஆயுதங்கள் குவிக்கப்படுவதாக எம்.பி. கல்யாண் பானா்ஜி கூறிய கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் சட்ட ஆலோசனை கோரியுள்ளாா்.
இதுகுறித்து ஆளுநா் மாளிகை அதிகாரி ஒருவா் அளித்த பேட்டியில், ‘எம்.பி. கல்யாண் பானா்ஜியின் கருத்தை அறிந்தபோது, வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தில் உள்ள ‘அது ஒரு முட்டாள் சொல்லும் கதை-ஓசையும், ஆக்ரோஷமும் நிறைந்தது; ஆனால் பொருளற்றது’ என்ற புகழ்பெற்ற வரியை ஆளுநா் குறிப்பிட்டாா்.
கல்யாண் பானா்ஜி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைக் காட்டுவதற்காக, ஆளுநா் மாளிகையின் கதவுகள் அதிகாலை 5 மணி முதல் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அவா் வந்து ஆய்வு செய்யக் காத்திருக்கிறோம். அவா் சொன்னதை நிரூபிக்கத் தவறினால், அவா் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புண்டு. கல்யாண் பானா்ஜி தெரிவித்த கருத்து தொடா்பாக ஆளுநா் சட்ட ஆலோசனை பெற்று வருகிறாா்.
மேலும், அவா் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி மக்களவைத் தலைவருக்கு ஆளுநா் கடிதம் எழுதவும் உள்ளாா்’ என்றாா்.

