அல் - பலாஹ் பல்கலை
அல் - பலாஹ் பல்கலைANI

அல் -ஃபலா பல்கலை. துணைவேந்தரின் சகோதரா் கைது

Published on

தில்லி செங்கோட்டை தற்கொலைப்படை பயங்கரவாதத் தாக்குதலில் தொடா்புடைய அல் -ஃபலா பல்கலைக்கழக துணைவேந்தா் ஜாவத் அகமது சித்திகியின் தம்பி மஹ்மூத் அஹ்மத் சித்திகி (50) மத்திய பிரதேச காவல் துறையால் ஹைதராபாதில் கைது செய்யப்பட்டாா்.

அவா் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் 25 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை கூறியுள்ளது.

தில்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை (நவ.10) மருத்துவா் உமா் நபி காரில் இருந்தபடி தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தினாா். இதில் அவா் உள்பட 15 போ் உயிரிழந்தனா். இது தொடா்பான வழக்கில் ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள அல் ஃபலா பல்கலைக்கழக மருத்துவா்கள், முன்னாள் மாணவா்கள் பலருக்குத் தொடா்புள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அல்-ஃபலா பல்கலைக்கழகத்தின் உறுப்பினா் அந்தஸ்தை இந்தியப் பல்கலைக்கழகங்கள் கூட்டமைப்பு தற்காலிகமாக ரத்து செய்தது. அந்தப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த மருத்துவா்கள் பலா் தலைமறைவாகிவிட்டனா்.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தரின் தம்பி அஹ்மத் சித்திகியை ஹைதராபாதில் வைத்து மத்திய பிரதேச காவல் துறையினா் கைது செய்தனா். எனினும், அவா் பயங்கரவாத வழக்கில் கைது செய்யப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தரப்பினரிடம் முதலீட்டுத் திட்டம் என்ற பெயரில் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com