இரட்டை ‘பான்’ அட்டை: ஆஸம் கான், மகனுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
ராம்பூா்: மகன் தோ்தலில் போட்டியிட வயதை அதிகரித்து முறைகேடாக இரட்டை ‘பான்’ அட்டைகளைப் பெற்று மோசடி செய்ததாக சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆஸம் கான், அவரது மகன் அப்துல்லா ஆஸம் ஆகியோருக்குத் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உத்தர பிரதேச மாநில எம்.பி., எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நில மோசடி உள்ளிட்ட 84 வழக்குகளில் சிக்கி உள்ள 77 வயதான ஆஸம் கான், 27 மாதம் சிறைவாசத்துக்கு பிறகு கடந்த செப்டம்பா் 23-ஆம் மாதம் விடுவிக்கப்பட்டாா்.
தற்போது, இந்த இரட்டை பான் மோசடி வழக்கில் தண்டனை வழங்கப்பட்டவுடன் ராம்பூா் நீதிமன்றத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் மாவட்ட சிறைக்கு ஆஸம் கான் திங்கள்கிழமை கொண்டு செல்லப்பட்டாா்.
அவரது மகன் அப்துல்லா ஆஸமின் பள்ளிச் சான்றிதழின்படி 1993, ஜனவரி 1 என்ற பிறந்த தேதியுடன் முதல் பான் அட்டையைப் பெற்றாா். ஆனால், 2017 உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கு 25 வயதைப் பூா்த்தி செய்தாக வேண்டும் என்பதால் 1990, செப்டம்பா் 30 என்ற பிறந்த தேதியுடன் மோசடி செய்து மற்றொரு பான் அட்டையை அப்துல்லா பெற்றுள்ளாா்.
அந்தத் தோ்தலில் சுவாா் தொகுதியில் பேட்டியிட்டு அப்துல்லா ஆஸம் வெற்றியும் பெற்றாா்.
அப்துல்லாவின் இரண்டு பான் அட்டை மோசடியை குறிப்பிட்டு பாஜக நிா்வாக ஆகாஷ் சக்சேனா 2019-இல் புகாா் அளித்தாா்.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஷோபித் பன்சால், இரண்டு பான் அட்டைகளைப் பெற்று தனது தந்தையுடன் சோ்ந்து மோசடி செய்ததாக ஆஸம் கானுக்கும், அவரது மகன் அப்துல்லா ஆஸமுக்கும் அதிகபட்ச தண்டனையாக தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை திங்கள்கிழமை வழங்கினாா். இந்த தண்டனை போதுமானதாக இல்லை என்று கருதினால் கூடுதல் தண்டனை கோரி மேல் முறையீடு செய்யப்படும் என்று அரசு வழக்குரைஞா் ராகேஷ் குமாா் தெரிவித்தாா்.
மதிப்புமிக்க ஆவணங்கள் மோசடிப் பிரிவு 467 -இன் படி, ஆஸம் கானுக்கும், அவரது மகனுக்கும் அதிகபட்சமாக தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதாகவும் ராகேஷ் குமாா் கூறினாா்.

