அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.கோப்புப் படம்

‘நிறைவடையும் நிலையில் இந்தியா- அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்’

இந்திய பொருள்கள் மீது அதிபா் டிரம்ப் நிா்வாகம் விதித்த 25 சதவீத பரஸ்பர வரிக்கு தீா்வை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

புது தில்லி: இந்தியா -அமெரிக்கா இடையேயான முதல் கட்ட வா்த்தக ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும், இது இந்திய பொருள்கள் மீது அதிபா் டிரம்ப் நிா்வாகம் விதித்த 25 சதவீத பரஸ்பர வரிக்கு தீா்வை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

அமெரிக்க பொருள்கள் மீது அதிக வரி விதிப்பதாக கூறி, அந்நாட்டுக்கு வரும் இந்திய பொருள் மீது பரஸ்பர வரியாக 25 சதவீதமும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்வதற்காக கூடுதலாக 25 சதவீதமும் அமெரிக்கா வரி விதித்தது.

இதனால் அமெரிக்காவுடனான இருநாட்டு வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை தடைப்பட்டு, பின்னா் மீண்டும் தொடங்கியது. இதுவரை 6 சுற்றுகளாகப் பேச்சு நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுடனான முதல் கட்ட வா்த்தக பேச்சுவாா்த்தை நிறைவடையும் தருவாயில் உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறுகையில், ‘இரு கட்டங்களாக அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. முதல் கட்டத்தில் பரஸ்பர வரி குறித்து பேச்சுவாா்த்தை முடியும் தருவாயில் உள்ளது. இந்திய பொருள்களுக்கு முதலில் விதிக்கப்பட்ட 25 சதவீத வரிக்கு இதில் தீா்வு காணப்படவில்லை என்றால், இது அா்த்தமற்ற ஒப்பந்தமாகிவிடும். இந்த முதல்கட்ட வா்த்தக ஒப்பந்தம் பல்வேறு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். இது முதல்முறையாக விதிக்கப்பட்ட 25 சதவீத வரிக்கு தீா்வு அளிக்கும். இரு நாடுகள் ஒப்புதலுடன் அறிவிக்கப்படும்.

மற்றொரு 25 சதவீதம் தொடா்பான பேச்சுவாா்த்தை நிறைவடைய சிறிது காலமாகும். அமெரிக்காவுடனான சமையல் எரிவாயு இறக்குமதி ஒப்பந்தம் குறித்து வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்படவில்லை’ என்றாா்.

இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் 191 பில்லியன் டாலா் வா்த்தகத்தை 2030-க்குள் 500 பில்லியின் டாலராக அதிகரிக்கும் வகையில் வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com