

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியின் மகன் அரசியலுக்கு வரவுள்ளதாக வெளியான தகவலுக்கு ராபர்ட் வதேரா விளக்கம் அளித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அங்கம்வகித்த இந்தியா கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 இடங்களில் மட்டுமே வென்றது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் வாக்குத் திருட்டை முன்னிறுத்தி ராகுல் காந்தி மிகப்பெரிய அளவிலான பேரணியை நடத்தினார். இருப்பினும், காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருப்பது கட்சியினரைடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில மாதங்களில் கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், 25 வயது நிரம்பியிருக்கும் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வதேரா அரசியலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதுதொடர்பாக, பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
”ரைஹான் தற்போது மிகவும் இளம் வயதில் இருக்கிறார். அவர் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது அரசியல் கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், தற்போது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இப்போது அவரை அரசியலில் அறிமுகப்படுத்துவது சரியாக இருக்காது.
நான் அரசியலில் நுழைந்தால் பாஜகவினர் வாரிசு அரசியல் என்று பேசுவார்கள். மக்கள் விரும்பினால் மட்டுமே, நான் தீவிர அரசியலில் இறங்குவேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று பார்ப்போம்." எனத் தெரிவித்தார்.
மேலும், பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராபர்ட் வதேரா பேசியதாவது:
”பிகாரில் புதிதாக அமையவுள்ள அரசாங்கம், தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு உதவுகிறது என்பதை ராகுல் தெளிவுப்படுத்துவார்.
பிகார் தேர்தல் முடிவுகளில் மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை. ராகுலும், பிரியங்காவும் தொடர்ந்து கடினமாக உழைப்பார்கள். நாடு முழுவதும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் போராட்டம் தொடரும். நியாயமான தேர்தல் இல்லாமல் எந்த முன்னேற்றமும் இருக்காது.
வாக்குச்சீட்டுகள் மூலம் தேர்தல்கள் நடத்தப்பட்டால் முடிவுகள் மாறுபடும். ஆனால், எனக்குத் தெரியும், மறுதேர்தல் ஒருபோதும் நடக்காது. தேர்தல் ஆணையம், பாஜக மற்றும் அவர்களது அணிகள் தற்போது அடுத்த தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டுள்ளார்கள். இவர்களின் அரசாங்கம், அதானி, அம்பானிக்கு மட்டுமே பயனளிக்கும்.
ராகுல் காந்தி பிரதமரானாலும் இல்லாவிட்டாலும், எங்களின் நோக்கம், நாடு ஒற்றுமையாகவும், மதச்சார்பற்றதாகவும், ஜனநாயகமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே ஆகும். இதற்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது மிகவும் முக்கியமானது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.