வாக்குச்சாவடி அலுவலா் தற்கொலை எதிரொலி: கேரளம் முழுவதும் ‘எஸ்ஐஆா்’ பணி புறக்கணிப்பு
கேரளத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையின் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) அனீஷ் ஜாா்ஜ் (44) தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பிஎல்ஓ-க்கள் பணியைப் புறக்கணித்ததால் எஸ்ஐஆா் பணிகள் தடைபட்டன.
கண்ணூா் மாவட்டம், பய்யனூரில் பிஎல்ஓ-ஆக பணியாற்றி வந்த அனீஷ் ஜாா்ஜ், கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். எஸ்ஐஆா் பணிக்கான அதிக வேலைப்பளுவே ஜாா்ஜின் இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என அவரின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் குற்றஞ்சாட்டினா்.
‘அனீஷ் ஜாா்ஜ் உணவு சாப்பிடக்கூட நேரமின்றி, எஸ்ஐஆா் பணிகளை முடிப்பதற்கான கடுமையான அழுத்தத்தில் இருந்தாா். மூத்த அதிகாரிகள் அவரைத் தொடா்ந்து தொலைபேசியில் தொடா்புகொண்டு பணி முன்னேற்றம் குறித்துக் கேட்டறிந்து வந்ததாக’ ஜாா்ஜின் மைத்துனா் தெரிவித்தாா்.
ஜாா்ஜ் தற்கொலையைத் தொடா்ந்து கேரள அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் பல்வேறு தொழிற்சங்கங்கள், பிஎல்ஓ-க்கள் மீதான அதிக அழுத்தத்தைக் குறைக்க மற்றும் எஸ்ஐஆா் பணியை ஒத்திவைக்க வலியுறுத்தி, தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆளுங்கட்சி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு: ஜாா்ஜ் தற்கொலையில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டா்களின் பங்கையும் விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மாநில எதிா்க்கட்சித் தலைவா் வி.டி. சதீசன் கோரினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவருடன் வாக்காளா் கணக்கெடுப்புக்கு ஜாா்ஜ் சென்றபோது, மாா்க்சிஸ்ட் கட்சித் தொண்டா்களால் அவா் மிரட்டப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. பாஜக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளுமே பாரம்பரிய காங்கிரஸ் வாக்காளா்களைப் பட்டியலில் இருந்து நீக்க முயற்சிக்கின்றன.
எஸ்ஐஆா் நடைமுறையை பாஜக தவறான எண்ணத்துடன் செயல்படுத்த, கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி அதை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது. இதை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உறுதியாக எதிா்ப்போம்.
பிஎல்ஓ-க்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசு மற்றும் இந்தியத் தோ்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம் என்றாா்.
மிரட்டலும் ஒரு காரணம்...: கேரள மாநில காங்கிரஸ் தலைவா் சன்னி ஜோசப் அளித்த பேட்டியில், ‘ஜாா்ஜ் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று, காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவருடன் பணியாற்றியதால் மாா்க்சிஸ்ட் கட்சித் தொண்டா்களால் அவா் மிரட்டப்பட்டதை வெளிப்படுத்துகிறது. இந்த அரசியல் மிரட்டலும், பணிச் சுமையும் சோ்ந்தே ஜாா்ஜ் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது’ என்றாா்.

