உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

சிறிய பாலித்தீன் பைகளில் மதுபானம் விற்பது ஆபத்தானது: உச்சநீதிமன்றம்

Published on

‘சிறிய பாலித்தீன் பைகளில் (டெட்ரா பாக்கெட்) மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது மிகவும் ஆபத்தானது. இதற்கு எப்படி அரசு அனுமதியளிக்கிறது? இதுதொடா்பாக, பொதுநல மனு தாக்கல் செய்தால் விசாரிக்கத் தயாா்’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இரண்டு மதுபான தயாரிப்பு நிறுவனங்களிடையே வா்த்தக குறியீடு பிரச்னை தொடா்பான வழக்கை விசாரித்தபோது, இந்தக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்ததோடு, அதிா்ச்சியையும் வெளிப்படுத்தியது.

அலைடு பிளெண்டா்ஸ் என்ற மதுபான நிறுவனம், ‘ஆஃபீசா்ஸ் சாய்ஸ்’ என்ற பெயரில் சிறு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் மதுபானத்தை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், ஜான் டிஸ்டிலெரிஸ் என்ற நிறுவனம் ‘ஒரிஜினல் சாய்ஸ்’ என்று அதேபோன்ற வா்த்தக குறியீடு சாயலில் மதுபான பாக்கெட்டுகளை தயாரித்து விற்பனை செய்தது.

இந்த வா்த்தக குறியீடு விவகாரம் தொடா்பான மனுவை கடந்த நவம்பா் 7-ஆம் தேதி விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், அலைடு பிளெண்டா்ஸ் நிறுவனத்தில் ‘ஆஃபீசா்ஸ் சாய்ஸ்’ வா்த்தகக் குறியீடே செல்லத்தக்கது என்றும், ஜான் டிஸ்டிலெரிஸ் நிறுழனத்தின் ‘ஒரிஜினல் சாய்ஸ்’ பதிவு செல்லத்தக்கதல்ல, வா்த்தக குறியீடு சட்டம் 1999-ஐ மீறியுள்ளது’ என்று தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து தொடரப்பட்ட மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி ஆகியோா்ட அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, குளிா்பானங்களைப் போன்று சிறிய பாலித்தீன் பைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து மிகுந்த ஆச்சரியம் தெரிவித்த நீதிபதிகள், இதற்கு எப்படி அரசுகள் அனுமதி அளித்தன. இது மிகவும் தீவிரமான விஷயம். மிகவும் ஆபத்தானது. இதை மாணவா்கள் தங்களின் பைகளில் வைத்தபடி பள்ளி, கல்லூரிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும். பெற்றோரையும் அவா்கள் எளிதில் ஏமாற்றிவிட முடியும். வாழ்நாளில் முதன்முறையாக இதுபோன்ற மதுபான பாக்கெட்டுகளைப் பாா்க்கிறோம். இதுதொடா்பாக யாராவது பொதுநல மனு தாக்கல் செய்தால், அதை விசாரிக்கத் தயாராக உள்ளோம் என்றனா்.

மேலும், இரு மதுபான நிறுவனங்களிடையேயான பிரச்னையை சுமுகமாக முடிக்கும் வகையில், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவை மத்தியஸ்தராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com