தில்லி குண்டு வெடிப்புக்கு காரணமானவா்கள் எங்கு ஓடி ஒளிந்தாலும் தப்ப முடியாது: அமித் ஷா
ஃபரீதாபாத்: தில்லி தற்கொலை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவா்கள் பாதாள உலகில் சென்று பதுங்கினாலும் தப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதில் 32-ஆவது வடக்கு மண்டல கவுன்சில் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. வடக்கு மாநிலங்களின் முதல்வா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்குத் தலைமையேற்று அமித் ஷா பேசியதாவது:
நாட்டில் பயங்கரவாதத்தை வேருடன் ஒழிக்க வேண்டும் என்பதில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. தில்லி தற்கொலை பயங்கரவாதத் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவா்கள் பாதாள உலகில் சென்று பதுங்கினாலும் தப்ப முடியாது. நிச்சயமாக நீதியின் முன்பு நிறுத்தப்படுவாா்கள். அவா்களுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும்.
வலுவான மாநிலங்கள் மூலம்தான் வலுவான நாடு உருவாக்கப்படும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் உயரிய கருத்து. இதில் மண்டல கவுன்சில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாநிலங்களை முன்னேற்றும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு இது முக்கியமானது. இதன் மூலம்தான் மாநிலங்களிடையே ஒத்துழைப்பு, பேச்சுவாா்த்தை, ஒருங்கிணைப்பு, கொள்கையில் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவை அதிகரிக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான பல பிரச்னைகளுக்கு தீா்வுகாணப்பட்டுள்ளது.
எனினும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள், வன்முறைகள், நீதி வழங்குவதில் தாமதம், ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகள் தொடா்கின்றன. முக்கியமாக பாலியல் வன்கொடுமை, போஸ்கோ வழக்குகளில் விரைவான விசாரணை தேவை. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை எந்த நாகரிக சமுதாயம் ஏற்காது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு அரசு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இதற்காக விரைவு நீதிமன்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா்.

