

பயங்கரவாதிகளுக்கு உதவுவோரையும் பயங்கரவாதிகளாகக் கருதும் அணுகுமுறையை இந்தியா தொடர்ந்து பின்பற்றும் என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா}சீனா ஆகியவற்றின் தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து கடந்த ஓராண்டில் இரு நாடுகளிடையிலான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து உருவாக்கப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைப் பொருத்தவரை, பாகிஸ்தான் விவகாரங்களைக் கையாள இந்தியா புதிய நடைமுறையைக் கடைப்பிடிக்கிறது. இந்தியாவைக் குறிவைக்கும் பயங்கரவாதக் குழுக்களை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரித்தால் அது அந்த நாட்டுக்கு பெரிய சவாலாக உருவெடுக்கும்.
வளர்ச்சி மற்றும் செழுமை மீது இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. நமது வழியில் யாரேனும் தடைகளை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் ரத்தமும் தண்ணீரும் ஒருசேர பாயமுடியாது என்றும் நாம் கூறிவருகிறோம். அமைதியான நடைமுறையை நாம் விரும்புகிறோம்.
அதுவரை பயங்கரவாதிகளுக்கு உதவுவோரையும் பயங்கரவாதிகளாகக் கருதும் அணுகுமுறையை இந்தியா தொடர்ந்து பின்பற்றும்.
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்ச மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உள்ளது. (பாகிஸ்தான் விடுக்கும் அணு ஆயுத மிரட்டலை மறைமுகமாகக் குறிப்பிட்டார்).
நமது ராணுவத்தின் தாக்குதல் திறன்களை மேம்படுத்துவதற்கான மன உறுதி இந்தியாவின் அரசியல் தலைமையிடம் உள்ளது. நமது தாக்குதல் திறன் மிகவும் வலுவானது.
அரசியல் சாசனத்தின் 370}ஆவது பிரிவு கடந்த 2019}இல் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு}காஷ்மீரில் நிலைமை மேம்பட்டுள்ளது. அரசியல் தெளிவு பிறந்தது. ஜம்மு}காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை பெரும் சரிவைக் கண்டுள்ளது.
மணிப்பூரில் நிலைமை மேம்பட்டுள்ளது. அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிசீலிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.