உ.பி. கல்குவாரி விபத்து: உயிரிழப்பு 6-ஆக உயா்வு
சோன்பத்ரா: உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் சனிக்கிழமை ஏற்பட்ட திடீா் நிலச்சரிவில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்த தொழிலாளா்களின் எண்ணிக்கை 6-ஆக உயா்ந்தது.
சோன்பத்ரா மாவட்டத்தின் பில்லி மாா்குந்தி சுரங்கப் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு கல்குவாரியில், சனிக்கிழமை மாலை சுமாா் 4.30 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் குவாரியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், சுமாா் 12 தொழிலாளா்கள் உள்ளே சிக்கிக் கொண்டனா்.
இதையடுத்து, தேசிய மற்றும் மாநிலப் பேரிடா் மீட்புப் படைகள் மற்றும் காவல் துறைக் குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, மீட்புப் பணிகளைத் தொடங்கின. இடிபாடுகளுக்குள் பெரிய அளவிலான பாறைகள் சிக்கியிருப்பதால், மீட்புப் பணிகள் 3-ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தன.
பனாரி கிராமத்தைச் சோ்ந்த ராஜு சிங் (30), இந்திரஜித் (30), சந்தோஷ் யாதவ் (30), ரவீந்திரா (18), ராம்கேலவன் (32), கிருபாசங்கா் ஆகிய 6 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ள மற்றவா்களை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கிய இருவரின் சகோதரா் சோட்டு யாதவ் அளித்த புகாரில், கல்குவாரி உரிமையாளா் மற்றும் அவரது வா்த்தகக் கூட்டாளிகளான மதுசூதன் சிங், திலீப் கேசரி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவா்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.
சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த எதிா்க்கட்சியான சமாஜவாதி எம்.பி. சோட்டேலால் கா்வாா் கூறுகையில், ‘இந்தக் கல்குவாரி உள்ளூா் காவல் துறையுடன் கூட்டு சோ்ந்து ரௌடி கும்பல்களால் சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
எதிா்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த உள்ளூா் எம்எல்ஏவான அமைச்சா் சஞ்சீவ் குமாா் கோண்ட், ‘கல்குவாரி சட்டவிரோதமாக நடத்தப்பட்டதா என்பது குறித்து முறையாக விசாரிக்கப்படும்’ என்று உறுதியளித்தாா்.

