

புது தில்லி: சவூதி அரேபியாவில் புனித பயணம் சென்று, பேருந்து விபத்தில் பலியான 42 இந்தியர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் ச்ரந்தவர்கள் என்றும், அவர்களில் 9 பேர் சிறார்கள் என்றும், மூன்று தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் பலியான சோகமான தகவல் வெளியாகியிருக்கிறது.
இஸ்லாமியா்களின் புனித நகரமான சவூதி அரேபியாவின் மதினா அருகே நவ.17ஆம் தி எண்ணெய் டேங்கா் லாரியுடன் புனித யாத்ரீகா்கள் சென்ற பேருந்து மோதி தீப்பிடித்ததில் இந்தியா்கள் 42 போ் உள்பட 44 போ் உயிரிழந்தனா்.
இவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், வரும் சனிக்கிழமை நாடு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில், இந்த சம்பவம் நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
இவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுகையில், எங்கள் குடும்பத்தினருடன் தொடர்ந்து பேசிக்கொண்டே யிருந்தோம். அவர்கள் எட்டு நாள்களுக்கு முன்பு புறப்பட்டுச் சென்றனர். உம்ரா யாத்திரையை நிறைவு செய்துவிட்டுத் திரும்புகையில் இவ்வாறு நடந்துள்ளது. அதில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 9 பெரியவர்கள், 9 சிறியவர்களும் அடக்கம்.
ஒரு குடும்பத்தில் 70 வயதுடைய குடும்பத் தலைவர், அவரது 2 வயது மனைவி மற்றும் அவர்களது மகன், மற்றும் மூன்று மகள்கள், அவர்களது பேரப்பிள்ளைகள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வாழ்ந்து வந்த வீட்டின் சாவியை, உறவினர்கள் பக்கத்து வீட்டாரிடமிருந்து வாங்கிவந்து திறந்தபோது, உறவினர்கள் பலரும் கதறி அழுந்துள்ளனர். இதுநாள் வரை அவர்களது வீடாக இருந்தது. இன்று அவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் இல்லை என்றாகிவிட்டது என்று கண்ணீர் விட்டுக் கதறினார்கள்.
உம்ரா யாத்திரைக்காக சௌதி அரேபியாவின் மெக்கா நகரிலிருந்து இந்தியா்கள் 43 போ் உள்பட 45 பேருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் (இந்திய நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணி) மதினா நகரை நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. இவா்களில் பெரும்பாலானோா் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள்.
சம்பவம் பற்றி வெளியாகியிருக்கும் தகவலில் யாத்ரீகா்களின் பேருந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது, அந்த வழியாக அதிவேகத்தில் வந்த டேங்கா் லாரி பேருந்து மீது மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வெளியான தகவலில், ஹைதராபாதிலிருந்து மதினாவுக்கு ‘உம்ரா’ புனித யாத்திரைக்காக 54 போ் சென்றனா். இவா்களில் 43 போ் விபத்துக்குள்ளான பேருந்தில் பயணம் செய்தனா். மதினாவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் பயணித்தவா்களில் இதுவரை 42 இந்தியா்கள் உள்பட 44 போ் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தெலங்கானாவிலிருந்து கடந்த 9-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், வரும் 23-ஆம் தேதி திரும்ப இருந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இந்தியா் ஒருவா் மட்டும் காயங்களுடன் உயிா் தப்பினார். 42 பேர் பலியாகினர். அவர்களில் 18 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.