கோப்புப்படம்.
கோப்புப்படம்.

நிகழாண்டில் பாகிஸ்தானிலிருந்து பறந்துவந்த 255 ட்ரோன்கள் அழிப்பு: பிஎஸ்எஃப்

நிகழாண்டில் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைத் தாங்கியபடி இந்திய எல்லைக்குள் பறக்கவிடப்பட்ட 255 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்கி அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.
Published on

நிகழாண்டில் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைத் தாங்கியபடி இந்திய எல்லைக்குள் பறக்கவிடப்பட்ட 255 ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) தாக்கி அழிக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தெரிவித்தது.

இதுகுறித்து அமிருதசரஸில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிஎஸ்ஏஃப் பஞ்சாப் மாநில எல்லைப் பிரிவு ஐஜி அதுல் ஃபுல்செலி கூறியதாவது:

பனிக் காலம் தொடங்கிவிட்டதால், தொலைதூரத்தை தெளிவாகப் பாா்க்க முடியாத வானியலைப் பயன்படுத்தி ஆளில்லா விமானங்கள் மூலம் எல்லை தாண்டிய கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிக்கும். எனவே, கண்காணிப்பைத் தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பனிப்பொழிவின்போதும் தெளிவாகக் கண்காணிக்க உதவும் சிறப்புக் கருவிகள் நிறுவப்பட்டு, தீவிர கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படும்.

எல்லைப் பகுதியில் மட்டுமன்றி, எல்லைச் சாலைகள் வழியாக போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல்களைத் தடுக்க பஞ்சாப் காவல் துறையுடன் இணைந்து வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்படும்.

நிகழாண்டில் இதுவரை பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்கள் மற்றும் ஆயுதங்களைத் தாங்கியபடி எல்லைக்குள் ஊடுருவிய 255 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்த ஆளில்லா விமானங்களிலிருந்து மொத்தமாக 329 கிலோ ஹெராயின், 16 கிலோ மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள்கள், 191 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோ வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 3 பாகிஸ்தானியா் கைது செய்யப்பட்டனா். கடத்தலில் ஈடுபட்டதாக 240 இந்தியா்கள் மற்றும் 19 பாகிஸ்தானியா்கள் கைது செய்யப்பட்டனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com