

பருந்து இனத்தைச் சேர்ந்த அமுர் ஃபால்கன் என்ற பறவை, கடந்த 5 நாள்களில் இந்தியாவின் மணிப்பூரிலிரிந்து பறந்து சோமாலியாவுக்குச் சென்றுள்ளது.
நாளொன்றுக்கு 1000 கி.மீ. வீதம் 5 நாள்களில் 5400 கி.மீ. தூரம் வரை பறந்து, பறவை ஆர்வலர்களை வியக்கவைத்துள்ளது.
வடக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அமுர் ஃபால்கன் பறவைகள் அழியும் நிலையில் உள்ளன. இவற்றை வனவிலங்கு ஆர்வலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
சீன நாட்டின் வட கிழக்குப் பகுதியில் உள்ள அமுர் ஃபால்கன் என்ற பறவை இனம் குறித்து இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர், 2013-ஆம் ஆண்டு முதல் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர்.
இடப்பெயர்ச்சி காலங்களில் இந்தப் பறவைகள் இந்தியாவிலுள்ள மணிப்பூர், நாகாலாந்துக்கு வருவது வழக்கமானது. அங்கு சிறிது ஓய்வுக்குப் பிறகு ஆப்பிரிக்காவை நோக்கி பறக்கின்றன.
இதனிடையே அமுர் ஃபால்கன் இனத்தைச் சேர்ந்த அபாபனாக் என்ற ஆண் பறவை, அலங் என்ற இளம் பெண் பறவை, அஹு என்ற பெண் பறவை என மூன்று பறவைகளும் கருவி பொருத்தப்பட்டு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காணிப்பில், வியக்கத்தக்க வகையில், அபாபனாக் என்ற ஆண் பறவை 5400 கி.மீ. வரை பறந்துள்ளது. இந்த தூரத்தை கடக்க 5 நாள்கள் 15 மணிநேரம் மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது. இப்பறவை 150 கிராம் எடை உடையது. இந்தப் பயணத்தின் மூலம் உலகின் மிக வேகமான இடம்பெயரும் பறவையாக இது மாறியுள்ளது.
குறிப்பாக கருவி பொருத்தப்பட்ட பிறகு பறந்த பறவை, மத்திய இந்தியா முழுக்க இடைவிடாது 76 மணிநேரத்துக்கு 3000 கி.மீ. பறந்து அரபிக் கடல் பறப்பை அடைந்துள்ளது. இதனை தமிழக கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மணிப்பூர், நாகாலாந்து போன்ற வடகிழக்குப் பகுதிகளில் உள்ள காடுகளுக்கு உணவுக்காக இடம்பெயர்ந்து வரும் அமுர் ஃபால்கன் பறவைகள் அங்குள்ள மக்களால் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தற்போது அப்பறவைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | விரைவில் வாட்ஸ்ஆப் கால்களை ஷெட்யூல் செய்யும் வசதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.