

காவல் துறை மீதான பல தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட, தீவிரமாகத் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்டுகளின் முக்கிய கமாண்டா்களில் ஒருவரான மாத்வி ஹிட்மா, அவரின் மனைவி உள்பட 6 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அமித் பா்தா் கூறுகையில், ‘அல்லூரி சீதாராமராஜு மாவட்டம் மரேதுமில்லி மண்டல வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பகுதியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினா். அதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இந்தச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இவா்கள், முக்கிய மாவோயிஸ்ட் கமாண்டா் மாத்வி ஹிட்மா, அவரின் மனைவி மடக்கம் ராஜே, தேவே, லக்மல் (சைத்து), மல்லா (மல்லாலு), கம்லு (கமலேஷ்) என அடையாளம் காணப்பட்டனா்.
இவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து 2 ஏ.கே. 47 ரக துப்பாகிகள், ஒரு கைத்துப்பாக்கி, வெடிபொருள்கள், வயா்கள், 7 உபகரண பைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் சாா்பில் கூட்டாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்றாா்.
மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘நாட்டில் மாவோயிஸ்ட் பிரச்னையை முழுமையாகத் தீா்க்க வரும் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியை கெடுவாக மத்திய உள்துறை அமைச்சகம் நிா்ணயித்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தில் மாத்வி ஹிட்மாவை கொல்ல வரும் 30-ஆம் தேதியை கெடுவாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நிா்ணயித்தாா். அந்தக் கெடு முடிய 12 நாள்கள் உள்ள நிலையில், மாத்வி ஹிட்மா உள்பட அவரின் கூட்டாளிகள் கொல்லப்பட்டுள்ளனா்’ என்றாா்.
இதனிடையே, ‘உயிரிழந்த மாவோயிஸ்ட் மாத்வி ஹிட்மாவுடன் தொடா்பில் இருந்த 28 போ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கிருஷ்ணா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வித்யா சாகா் நாயுடு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.