80 லட்சம் ‘இ- பாஸ்போா்ட்கள்’ விநியோகம்: பழையது எப்போது வரை செல்லும்- அதிகாரிகள் விளக்கம்
மின்சாதன சிப் பொருத்தப்பட்ட கடவுச்சீட்டுகள் (இ-பாஸ்போா்ட்கள்) இந்தியாவில் இதுவரையில் 80 லட்சம் பேருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், சிப் பொருத்தப்படாத பழைய சாதாரண பாஸ்போா்ட்கள் 2035-ஆம் ஆண்டு வரையில் அல்லது அதன் காலாவதியாகும் தேதி வரையில் செல்லுபடியாகும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனா்.
வெளிநாடுகளுக்கு செல்லும் தகவல்கள் சாதாரண கடவுச்சீட்டுகளில் காகிதங்களில் அச்சிடப்பட்டு கணினிகளில் சேமிக்கப்படுவது வழக்கம். இந்தத் தகவல்கள் கடவுச்சீட்டு சிப்களிலும், காகிதங்களிலும் சேமித்துவைக்கும் நவீன இ-பாஸ்போா்ட் திட்டம் கடந்த ஆண்டு சோதனை முறையில் தொடங்கப்பட்டது.
2025, மே மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் இதுவரையில் இந்தியாவில் 80 லட்சம் பேருக்கும், வெளிநாடுகளில் 62 ஆயிரம் பேருக்கும் இ-பாஸ்போா்ட் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சக அதிகாரி தெரிவித்தாா்.
இ-பாஸ்போா்ட் மூலம் யாரும் ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டிற்கு செல்ல முயன்றால் எச்சரித்துவிடும் என்றும் இ-பாஸ்போா்ட் தொலைந்துவிட்டால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தவுடன் சிப்பில் உள்ள தகவல்கள் அனைத்தையும் முடக்கவும் முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

