தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலைக்கழக தலைவரைக் கைது செய்தது அமலாக்கத் துறை

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதின் அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழக குழுமத் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கை சட்ட விரோத பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
தில்லி கார் வெடிப்பு
தில்லி கார் வெடிப்புPTI
Published on
Updated on
1 min read

நமது திருபர்

தில்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாதின் அல் ஃபலா மருத்துவ பல்கலைக்கழக குழுமத் தலைவர் ஜாவத் அகமது சித்திக்கை சட்ட விரோத பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை கைது செய்தது.

அல் ஃபலா அறக்கட்டளை, அதன் பல்கலைக்கழக நிறுவனங்கள், மேம்பாட்டாளர்கள் தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை காலை 5.15 மணிக்கு சோதனையைத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை இரவு முடிவடைந்த இந்த சோதனையில் ரூ.48 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும், போலி நிறுவனங்கள் மூலம் பண முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அல் ஃபலா குழுமத் தலைவர் ஜாவத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

15 பேர் உயிரிழந்த தில்லி செங்கோட்டை கார் வெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), தில்லி காவல்துறை தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கைகளைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியதாக கருதப்படும் இந்தப் பல்கலைக்கழக மருத்துவர் உமர் நபியின் நெருங்கிய உதவியாளர்கள் இரண்டு பேரை என்ஐஏ கைது செய்துள்ளது. இதில், ஜசீர் பிலாலை 10 நாள்கள் என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

மற்றொரு நபரான அமீர் ரஷீத் அலியை 10 நாள்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க திங்கள்கிழமை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

காஷ்மீரில் ஒருவர் கைது: முன்னதாக என்ஐஏ வெளியிட்ட அறிக்கையில், "தில்லி கார் வெடிப்பு பயங்கரவாத தாக்குலுக்கு முன்பு ட்ரோன், ராக்கெட்டுகளை உருவாக்கி தாக்குதல் நடத்த தொழில்நுட்பரீதியில் உமர் நபிக்கு உதவியதாக காஷ்மீரில் வானி என்பவர் கைது செய்யப்பட்டார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விடியோ வெளியீடு: இதனிடையே, கார் வெடிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தி உமர் நபி பேசும் விடியோ செவ்வாய்க்கிழமை வெளியானது. ஜம்மு காஷ்மீர் போலீஸôரால் பறிமுதல் செய்யப்பட்ட அவரது கைப்பேசியில் இது பதிவாகி இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com