பிகாா் தோ்தலில் கட்சி விரோத செயல்கள்- முன்னாள் அமைச்சா்கள் உள்பட 43 பேருக்கு காங்கிரஸ் நோட்டீஸ்
பிகாா் பேரவைத் தோ்தலில் கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதாக, மாநில முன்னாள் அமைச்சா்கள் உள்பட 43 பேரிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தோ்தல் பிரசாரத்தில் கட்சியின் அதிகாரபூா்வ நிலைப்பாட்டுக்குப் புறம்பாக பேசியதாக இவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பிகாா் பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் இண்டி கூட்டணி படுதோல்வியடைந்தது. கடந்த முறை 19 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸுக்கு இந்த முறை 6 இடங்களே கிடைத்தன.
இந்தத் தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் ஆராய்ந்துவரும் நிலையில், முன்னாள் அமைச்சா் வீணா ஷாஹி, முன்னாள் மாநில பொதுச் செயலா் கைசா் கான், முன்னாள் எம்எல்ஏ சுதிா் குமாா், முன்னாள் எம்எல்சி அஜய் குமாா் சிங் உள்பட 43 பேருக்கு கட்சியின் மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடா்பாக குழுவின் தலைவா் கபில் தேவ் பிரசாத் யாதவ் கூறுகையில், ‘கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒழுங்குமுறைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 43 பேரும் நவ. 21-ஆம் தேதிக்குள் எழுத்துபூா்வமாக விளக்கமளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த காலத்துக்குள் உரிய விளக்கமளிக்காவிட்டால், கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றாா்.
