

தில்லியில் நடத்தியதைப் போல ஜம்மு-காஷ்மீரிலும் வாகன குண்டு வெடிப்புத் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத் துறை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தில்லி செங்கோட்டை அருகேவுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாம் வாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் கடும் நெரிசலுக்கு மத்தியில் கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் அருகில் இருந்த வாகனங்களும் தீக்கிரையாகின. இச்சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பின் தாக்குதல் பாணியில் இருப்பதாக விசாரணை அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பு புல்வாமா தாக்குதலின்போதும், 2019ஆம் ஆண்டு ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களும் இதே பாணியில் தாக்குதலுக்குள்ளாகின.
இந்நிலையில் இதேபோன்ற வாகன குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்த ஜெய்ஷ் -இ- முகமது அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தரப்பிலிருந்து ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், யூனியன் பிரதேசம் முழுவதுமே கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் மேற்கு எல்லைகளைத் தாண்டி தில்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய பகுதிகளில் தாக்குதலுக்கான திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதாக உளவுத் துறையிலிருந்து இதற்கு முன்பே தகவல் கூறப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, தற்போது ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தில்லி கார் வெடிப்பு: கைதான ஜசிர் பிலாலுக்கு 10 நாள்கள் விசாரணைக் காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.