இருமல் மருந்து
இருமல் மருந்துபடம் | ஐஏஎன்எஸ்

இருமல் மருந்து விற்பனைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்

இருமல் மருந்துகள் விற்பனைக்கு நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருகிறது.
Published on

இருமல் மருந்துகள் விற்பனைக்கு நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருகிறது. அவை அமல்படுத்தப்பட்டால் இனி மருத்துவரின் பரிந்துரையின்றி அவற்றை வாங்க முடியாது. அதேபோன்று அதற்கான உரிமம் இல்லாமல் விற்பனை செய்யவும் முடியாது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்தை உட்கொண்டதால் 24 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் சூழலில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

இருமல் மருந்துகளைப் பொருத்தவரை அட்டவணை ‘கே’ எனப்படும் குறைந்த அபாயம் கொண்ட மருந்துகள் பட்டியலில் தற்போது உள்ளன. காயங்களுக்கு பயன்படுத்தப்படும் பேண்டேஜ்கள், கிருமி நாசினிகள், பாராசிட்டமால் மாத்திரைகள், கிரைப் வாட்டா் உள்ளிட்டவையும் அட்டவணை ‘கே’-வின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, அவற்றை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் இல்லை. இதன் காரணமாகவே இருமல் மருந்தை எப்போதும், யாா் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற சூழல் உள்ளது.

மத்திய பிரதேச சம்பவத்துக்குப் பிறகு சில மாநிலங்களில் இருமல் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், அதை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருகிறது.

இதற்கான பரிந்துரைகளை அரசிடம் மருந்து ஆலோசனைக் குழு (டிசிசி) சமா்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அவை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அவற்றுக்கு ஒப்புதல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய சூழலில் முழுமையான மருந்தாளுநா் உரிமம் இல்லாதவா்களும் இருமல் மருந்துகளை விற்க முடியும். அட்டவணை ‘கே’-வில் இருந்து இருமல் மருந்தை நீக்கிவிட்டால், எளிதில் அவற்றை விற்பனை செய்ய முடியாது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டும், மருந்து விற்பனைக்கான உரிமமும் கட்டாயமாகிவிடும் என்று சுகாதார ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com