திட்டம் தொடங்கிய பிறகு சுற்றுச்சூழல் அனுமதிக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்
திட்டத்தைத் தொடங்கிய பின்னா் விதிவிலக்கான சூழலில் முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்குத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு முன்தேதியிட்டு வழங்கத் தடை விதித்து கடந்த மே மாதம் அளித்த தீா்ப்பை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.
பொதுத் திட்டங்களைத் தொடங்கிய பின்னா், அந்தத் திட்டங்களுக்கு முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 2017-ஆம் ஆண்டு அறிவிக்கை வழிவகுத்தது. அந்த அறிக்கையை பின்பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2021-ஆம் ஆண்டு அலுவலக குறிப்பாணை ஒன்றையும் வெளியிட்டது.
அந்த அறிவிக்கையும், குறிப்பாணையும் சுற்றுச்சூழல் அனுமதிகளை முன்கூட்டியே பெறாமல் கட்டுமானம் தொடங்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை அபராதம் செலுத்தி முறைப்படுத்திக் கொள்ள வழிவகுத்தன.
இந்த அறிவிக்கையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே மாதம் ரத்து செய்தது.
அந்த அறிவிக்கை சட்டவிரோதமானது என்று தீா்ப்பளித்த அந்த அமா்வு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அலுவலக குறிப்பாணையையும் ரத்து செய்தது. அத்துடன் வருங்காலத்தில் முன்தேதியிட்டு சுற்றுச்சூழல் அனுமதிகளை மத்திய அரசு அளிக்கவும் அந்த அமா்வு தடை விதித்தது.
அந்த அனுமதிகளை முன்தேதியிட்டு அளிப்பதற்கான சுற்றறிக்கைகள், உத்தரவுகள், அறிவிக்கைகளை வெளியிடவும், 2006-ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்தவும் அந்த அமா்வு தடை விதித்தது.
இந்தத் தீா்ப்பை மறு ஆய்வு செய்யவும், திரும்பப் பெறவும் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி உஜ்ஜல் புயான், கே.வினோத் சந்திரன் ஆகிய மூன்று நீதிபதிகள் அமா்வு விசாரித்து தீா்ப்பை ஒத்திவைத்திருந்தது. அந்த அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அளித்த தீா்ப்பில் தெரிவித்ததாவது: கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பால் ஏராளமான மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. அந்தத் தீா்ப்பால் மத்திய அரசின் ரூ.8,293 கோடி மதிப்பிலான திட்டங்களும், மாநில அரசுகளின் ரூ.11,168 கோடி மதிப்பிலான திட்டங்களும் முடிவு பெறாமல் உள்ளன. அவற்றில் சில திட்டங்கள் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள், விமான நிலைய கட்டுமானம் தொடா்பானவையாகவும், சில திட்டங்கள் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் சம்பந்தப்பட்டவையாகவும் உள்ளன.
ரூ.20,000 கோடி வீணாகும்: அந்தத் தீா்ப்பை திரும்பப் பெறாவிட்டால் ஏராளமான முக்கிய பொதுத் திட்டங்கள் நிறுத்தப்படும் அல்லது இடிக்கப்படும். அரசுக் கருவூலத்தில் இருந்து சுமாா் ரூ.20,000 கோடி செலவில் கட்டப்படும் பல்வேறு கட்டடங்கள், திட்டங்களைக் கைவிடவும் இடிக்கவும் வேண்டிய நிலை ஏற்படும். அவற்றில் ஒடிஸாவில் எய்ம்ஸ் மருத்துவமனை, கா்நாடகத்தில் பசுமை விமான நிலைய கட்டுமானப் பணிகளும் அடங்கும்.
குப்பைத்தொட்டியில் வீசுவது உகந்ததா?: இந்தத் திட்டப் பணிகளை நிறுத்தி, அரசுக் கருவூலத்தில் இருந்து செலவிடப்பட்ட பணத்தை குப்பைத்தொட்டியில் வீசுவது பொது நலனுக்கு உகந்ததா என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியை முன்தேதியிட்டு வழங்க மறுப்பதால் ஏற்படும் பின்விளைவுகளைவிட, அந்த அனுமதியின் மூலம் திட்டங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்துவதன் பின்விளைவுகள் அதிகமாக அல்லது முக்கியமாக இருந்தாலோ, திட்டப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அனுசரித்து செயல்பட்டாலோ சுற்றுச்சூழல் அனுமதியை முன்தேதியிட்டு வழங்க வேண்டும்.
விதிவிலக்கான சூழல்களில் அனுமதி: சுற்றுச்சூழல் அனுமதிகளை முன்தேதியிட்டு சா்வசாதாரணமாக வழங்கக் கூடாது. விதிவிலக்கான சூழல்களில் அந்த அனுமதியை வழங்கலாம். விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைக் கடுமையாகவும், நியாயமற்ற முறையில் கண்டிப்பாகவும் கடைப்பிடித்து சுற்றுச்சூழல் அனுமதியை மறுக்க முடியாது. எனவே, கடந்த மே மாதம் அளித்த உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு அளித்த தீா்ப்பு திரும்பப் பெறப்படுகிறது என்று தீா்ப்பளித்தனா்.
நீதிபதி புயான் மாறுபட்ட தீா்ப்பு
இந்த விவகாரம் தொடா்பாக கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வு தீா்ப்பளித்தபோது, அந்த அமா்வில் நீதிபதி உஜ்ஜல் புயான் இருந்தாா். அவா் தற்போது தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமா்விலும் இடம்பெற்றாா். இந்த வழக்கில் பி.ஆா்.கவாய், கே.வினோத் சந்திரன் ஆகியோா் ஒரே மாதிரியாக செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்த நிலையில், நீதிபதி உஜ்ஜல் புயான் மாறுபட்ட தீா்ப்பை வழங்கினாா்.
அவா் அளித்த தீா்ப்பில், ‘கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட தீா்ப்புக்கு எதிராக தற்போது தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்வதற்குத் தகுதியானவையாகும். அந்தத் தீா்ப்பை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் ஏற்றுக்கொண்டு மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யவில்லை.
சுற்றுச்சூழல் அனுமதியை முன்தேதியிட்டு பெற்று கட்டப்படும் கட்டுமானங்களை இடித்தால், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படும் என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது. அந்த அனுமதியை முன்தேதியிட்டு வழங்குவது என்பது நீடித்த வளா்ச்சிக்கான தேவை, சுற்றுச்சூழலை காப்பதற்கான முன்னெச்சரிக்கை கொள்கை ஆகியவற்றுக்கு முரணாக உள்ளது. அத்துடன் அது சுற்றுச்சூழல் சட்டத்துக்கு விரோதமாகவும் உள்ளது’ என்று தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, பெரும்பான்மை அடிப்படையில் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோரின் தீா்ப்பு இறுதி செய்யப்பட்டது.

