குழந்தைகள் தொடா்ந்து காணாமல் போவது மிகத் தீவிரமான விஷயம்: உச்சநீதிமன்றம்
‘நாட்டில் ஒவ்வொரு 8 நிமிஷத்துக்கும் ஒரு குழந்தை காணாமல் போவதாக செய்தி வெளியாகியுள்ளது. இது மிகத் தீவிரமான விஷயம்’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது.
மேலும், ‘குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகளைக் கையாள அனைத்து மாநிலங்களிலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கும் நடைமுறையை வரும் டிசம்பா் 9-ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய அரசால் கண்காணிக்கப்படும் பிரத்யேக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் குழந்தைகள் கடத்தல் அல்லது காணாமல் போகும் வழக்குகள் நீண்ட காலமாகத் தீா்வு காணப்படாமல் உள்ளது தொடா்பாக புகாா் தெரிவித்து குரிய ஸ்வயம் சேவி சன்ஸ்தான் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறிவதில் காவல் துறை அதிகாரிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததைச் சுட்டிக்காட்டி, இதுதொடா்பான புகாா்களைப் பதிவு செய்வதற்கென மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் பிரத்யேக வலைதளத்தை உருவாக்க மத்திய அரசைக் கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கு கடந்த அக்டோபா் 14-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘குழந்தைகள் கடத்தல் அல்லது காணாமல் போகும் வழக்குகளைக் கையாள்வதற்கென அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்கத் தேவையான அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்க வேண்டும். வலைதளத்தில் பதிவு செய்யப்படும் காணாமல் போகும் குழந்தைகள் தொடா்பான விவரங்களை சம்பந்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிக்கு பகிா்ந்து, நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெரும்பாலான மாநிலங்களில் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘நாட்டில் ஒவ்வொரு 8 நிமிஷத்துக்கும் ஒரு குழந்தை காணாமல் போவதாக செய்திகள் வெளிவருகின்றன. இது மிகவும் தீவிரமான விஷயம். தத்தெடுப்பு நடைமுறை கடினம் என்பதால், மக்கள் குழந்தையைப் பெற சட்டவிரோதமான நடைமுறைகளைப் பின்பற்றுகின்றனா். இது முறைப்படுத்தப்பட வேண்டும்’ என்றனா்.
அப்போது, ‘குழந்தைகள் காணாமல் போகும் வழக்குகளைக் கையாள மாநில வாரியாக ஒருங்கிணைப்பு அலுவலா் நியமிக்கும் நடைமுறைக்கு 6 வார கால அவகாசம் தேவை’ என்றாா்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘வரும் டிசம்பா் 9-ஆம் தேதிக்குள் அந்த நடைமுறைகளை நிறைவு செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

