

“தற்கொலைத் தாக்குதல் ஒரு தியாகச் செயல்” என தில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் உமர் பேசிய விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி செங்கோட்டை அருகேயுள்ள லால்கிலா மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவுவாயில் அருகே கடந்த 10 ஆம் தேதி மாலை கார் ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 15 பேர் பலியாகினர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியான மருத்துவர் உமர் நபிதான், தற்கொலைத் தாக்குதல் மூலமாக காரை வெடிக்க வைத்தாக தெரிவித்த நிலையில், இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத கும்பல்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், இந்தச் சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிபடுத்தியுள்ள தேசிய புலனாய்வு முகமை, கார் வெடிப்பில் வெடிகுண்டு வைத்து விபத்துக்குள்ளான காரை வாங்கிக் கொடுத்து அதனை ஓட்டிச் சென்ற மருத்துவர் உமர் நபிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏற்கெனவே அமீர் ரஷீத் அலி, ஜசிர் வானி உள்ளிட்ட இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில், தில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, மருத்துவர் உமர் நபி பேசிய பதிவு செய்த விடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்த நவம்பர் 10 ஆம் தேதிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் இந்த விடியோவில், தற்கொலைத் தாக்குதல் பற்றிய யோசனையை உமர் நபி தனியாக ஒரு அறையில் அமர்ந்து விவாதிப்பதைப் போன்று காட்டுகிறது.
அந்த விடியோவில் அவர் பேசும்போது, “தற்கொலை பற்றி அனைவராலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தற்கொலை குண்டுவெடிப்புக்கு எதிராக பல வாதங்களும் முரண்பாடுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிச்சயமாக இறக்கப் போகிறார் என்று முன்பே தெரிந்தும் அந்தக் காரியத்தைச் செய்வதால் அதைத் தியாகச் செயல்தான் என்று சொல்ல வேண்டும். அதனால், மரணத்திற்கு அஞ்சாதீர்கள்” என அவர் விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தில் தற்கொலை தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், உமர் நபி தற்கொலை குண்டுவெடிப்பை ‘தியாகி’ என்று நியாயப்படுத்துவது போலவும் அந்த விடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடியோ வெளியாக வேகமாக வைரலான நிலையில், இந்த விடியோவை வெளியிட்டவர் யார்? எவ்வாறு வெளியானது போன்ற எந்தத் தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.