வாக்குப்பதிவு இயந்திரங்களில் முன்கூட்டியே 25,000 வாக்குகள் பதிவு?: தேர்தல் ஆணையம் மறுப்பு

பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 25,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரான ஜகதானந்த் சிங் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்
Published on
Updated on
1 min read

பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் தலா 25,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்ததாக ஆர்ஜேடி கட்சியின் மூத்த தலைவரான ஜகதானந்த் சிங் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

பிகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 143 இடங்களில் போட்டியிட்டது. அதில் அக்கட்சி 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவு மக்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதால் அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அக்கட்சி திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவின் பாட்னா இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட பின் அக்கட்சியின் மூத்த தலைவரான ஜகதானந்த் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில் "வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே ஒவ்வொரு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் முன்கூட்டியே 25,000 வாக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த முறைகேட்டைத் தாண்டியும் எங்கள் கட்சி 25 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது' என்று குற்றம்சாட்டினார். எனினும், அவரது இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைஃபை, ப்ளூடூத், இணையதளம் அல்லது எந்தவொரு வெளிப்புற தொடர்புடனும் இணைக்கப்படவில்லை. வெளியில் இருந்து இந்த இயந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு ஒவ்வொரு வாக்காளருக்கும் பூஜ்யம் வாக்கு என்பதை இந்த இயந்திரங்கள் காட்டும். அனைத்து வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையிலும் தேர்தல் ஒத்திகை நடத்திக்காட்டப்பட்டது. அப்போது பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்குகளும் அவர்கள் முன் அகற்றப்பட்டன. தேர்தல் முடிந்த பின் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைப்பது, அவற்றை கட்டுப்பாட்டு அறையில் கொண்டுவந்து வைப்பது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலேயே மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடம் கையொப்பம் பெறப்படுகிறது. தேர்தலின் எந்தக் கட்டத்திலும் முரண்பாடுகளோ, முறைகேடுகளோ நடைபெற்றதாக ஆர்ஜேடி கட்சி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

அதேபோன்று, வாக்கு ஒப்புகைச் சீட்டு நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இதிலும் எந்த முறைகேடுகளும் காணப்படவில்லை.

தேர்தல் தொடர்பாக தற்போது ஆர்ஜேடி கட்சி எழுப்பியுள்ள குற்றச்சாட்டு தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லாதது மட்டுமின்றி நடைமுறை ரீதியில் தவறானதும் ஆகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com