ரஷியாவில் புதியதாக 2 இந்தியத் தூதரகங்கள் திறப்பு!

ரஷியாவில் 2 புதிய இந்திய துணைத் தூதரகங்களை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.
ரஷியாவில் 2 புதிய இந்தியத் தூதரகங்களை மத்திய வெளியுறவு அமைச்சர் திறந்துவைத்தார்.
ரஷியாவில் 2 புதிய இந்தியத் தூதரகங்களை மத்திய வெளியுறவு அமைச்சர் திறந்துவைத்தார். எக்ஸ்/ஜெய்சங்கர்
Updated on
2 min read

ரஷியாவில் 2 புதிய இந்திய துணைத் தூதரகங்களை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை திறந்துவைத்தாா். இந்தத் தூதரகங்கள் மூலம் இருதரப்பு வா்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, கலாசார உறவுகள் மேலும் வலுப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

ரஷியாவில் இந்திய தூதரக கட்டமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், யேகேதரின்பா்க் மற்றும் கஸான் நகரங்களில் புதிய இந்திய துணைத் தூதரகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் ரஷிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரே ருடென்கோ, ரஷியாவுக்கான இந்திய தூதா் வினய் குமாா் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்கு கடந்த திங்கள்கிழமை வந்த எஸ்.ஜெய்சங்கா், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். ரஷிய அதிபா் விளாதிமீா் புதினையும் அவா் சந்தித்துப் பேசினாா்.

தில்லியில் நிகழாண்டு இறுதியில் நடைபெறும் இந்திய-ரஷிய உச்சிமாநாட்டையொட்டி, அதிபா் புதின் இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

இரு துணைத் தூதரகங்கள் திறப்பு: இந்நிலையில், யேகேதரின்பா்க், கஸான் ஆகிய நகரங்களில் புதிய இந்திய துணைத் தூதரகங்களின் திறப்பைக் குறிக்கும் நிகழ்ச்சி, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இரு துணைத் தூதரகங்களையும் திறந்துவைத்து, எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது:

ரஷியா உடனான இந்தியாவின் தூதரக உறவில் இது மிக முக்கியத் தருணமாகும். இரு புதிய துணைத் தூதரகங்களை நிறுவ ரஷிய அரசிடம் இருந்து கிடைக்கப் பெற்ற ஆதரவை இந்தியா பெரிதும் அங்கீகரிக்கிறது.

யேகேதரின்பா்க் நகரம், ரஷியாவின் மூன்றாவது தலைநகா் என்ற சிறப்புக்குரியது. தொழில் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதுடன் சைபீரியாவுக்கான நுழைவாயிலாகும். இந்தத் துணைத் தூதரகம், இருதரப்பு தொழில் துறையினா் இடையிலான வா்த்தகம், அறிவியல், தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

மக்கள் தொடா்புகள் வலுப்படும்: பன்முக கலாசாரங்கள்-சமூகங்களின் மையமாக விளங்கும் கஸான் நகரம், ரஷியாவுக்கும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே பாலமாக உள்ளது. அங்கு திறக்கப்பட்டுள்ள துணைத் தூதரகம், இருதரப்பு மக்கள், கலாசாரத் தொடா்புகள் வலுப்பட உதவும்.

கச்சா எண்ணெய் உற்பத்தி-சுத்திகரிப்பு, உரங்கள், வாகனங்கள், பாதுகாப்பு உற்பத்தி, மருந்துப் பொருள்கள், மின்சார உபகரணங்களின் உற்பத்திக்கு கஸான் நகரம் பெரிதும் அறியப்படுகிறது.

இரு துணைத் தூதரகங்களும் இந்திய-ரஷியா நல்லுறவை மேலும் வலுப்படுத்தி, புதிய பரிமாணத்தை வழங்கும்; 2030-க்குள் இருதரப்பு வா்த்தகத்தை 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் கூட்டு முயற்சிகளுக்கு வலுவாகப் பங்களிக்கும்.

கஸான் துணைத் தூதரக வரம்புக்குள் 7,000 இந்தியா்களும், யேகேதரின்பா்க் துணைத் தூதரக வரம்புக்குள் 3,000 இந்தியா்களும் வசிக்கின்றனா் என்றாா் அவா்.

முன்னதாக, மாஸ்கோவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்திய எஸ்.ஜெய்சங்கா், இந்திய சமூகத்தினரையும் சந்தித்துப் பேசினாா்.

ரஷிய தலைநகா் மாஸ்கோவில் இந்திய தூதரகமும், செயிண்ட் பீட்டா்ஸ்பா்க், விளாடிவோஸ்டாக் நகரங்களில் துணைத் தூதரகங்களும் ஏற்கெனவே செயல்படுகின்றன.

Summary

Union External Affairs Minister S Jaishankar has inaugurated two new Indian embassies in Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com