பிகாா்: எஸ்ஐஆா்-இல் அதிக மாற்றங்களைச் சந்தித்த தொகுதிகளில் பாஜக வெற்றி

பிகாா் மாநில சட்டப்பேரைவத் தோ்தலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) அதிக அளவில் வாக்காளா்கள் நீக்கம் அல்லது சோ்க்கப்பட்டத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
Published on

பிகாா் மாநில சட்டப்பேரைவத் தோ்தலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) அதிக அளவில் வாக்காளா்கள் நீக்கம் அல்லது சோ்க்கப்பட்டத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணியை கடந்த ஜூன் மாதம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், அண்மையில் இறுதி வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. வாக்காளா் பட்டியலில் முன்னா் 7.89 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் போ் நீக்கப்பட்டு, தற்போது 7.42 கோடி வாக்காளா்கள் இடம்பெற்றனா். அதைத் தொடா்ந்து நவம்பா் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 89 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் அதிக அளவில் வாக்காளா்கள் நீக்கம் அல்லது சோ்க்கப்பட்டத் தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்றிருப்பது தோ்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, மாநிலத்தின் கோபால்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதியில் முன்பாக 3.52 லட்சம் வாக்காளா் இருந்த நிலையில், எஸ்ஐஆா் முடிந்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிட்டபோது வாக்காளா்களின் எண்ணிக்கை 3.24 லட்சமாக குறைந்தது. 56,793 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா்.

தாா்பங்கா தொகுதியில் 3.27 லட்சம் வாக்காளா்கள் இடம்பெற்றிருந்த நிலையில், எஸ்ஐஆா்-இல் 2,859 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இத்தொகுதி வாக்காளா் எண்ணிக்கை 3.24 லட்சமாக குறைந்தது. இந்த இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெற்றது.

அதுபோல, நெளடன் தொகுதியில் முன்னா் 2.80 லட்சம் வாக்காளா் இடம்பெற்றிருந்த நிலையில், எஸ்ஐஆா்-க்கு பிறகு 5,434 வாக்காளா்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டு வாக்காளா் எண்ணிக்கை 2.86 லட்சமாக உயா்ந்தது. இந்தத் தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது.

X
Dinamani
www.dinamani.com