ஏழு நாள்களுக்கு ஏழு நிறங்களில் படுக்கைவிரிப்புகள்: தில்லி அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்
தில்லி அரசு மருத்துவமனைகளில் சுகாதாரத்தைப் பேணுதல் மற்றும் நோயாளிகளுக்குப் பரவும் தொற்று நோய்களைக் குறைக்கும் நடவடிக்கையாக ஒவ்வொரு நாளும் ஒரு படுக்கைவிரிப்புகள் மாற்றப்படும் என தில்லி அரசு அறிவித்துள்ளது.
திங்கள்கிழமை-வெள்ளை, செவ்வாய்க்கிழமை-இளஞ்சிவப்பு, புதன்கிழமை-பச்சை, வியாழக்கிழமை-ஊதா, வெள்ளிக்கிழமை-நீலம், சனிக்கிழமை-இளஞ்சாம்பல், ஞாயிற்றுக்கிழமை-செம்மஞ்சள் (பீச்) என ஒவ்வொரு நாளும் ஒரு நிறத்தில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைவிரிப்புகள் மாற்றப்படும் என தில்லி அரசின் அதிகாரபூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியில் எவ்வித தடங்கலும் இல்லாமல் இருக்க போதிய படுக்கைவிரிப்புகள் இருப்பில் இருப்பதை உறுதிசெய்யுமாறு மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளில் சுகாதாரத்தைப் பராமரிக்கும் ‘காயகல்ப்’ திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அந்தத் திட்டத்தின்கீழ் தில்லியில் செயல்படுத்தப்படுத்துவது தொடா்பாக சுகாதாரத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறுகையில், ‘மருத்துவமனையில் நோயாளிகளுக்கான வசதி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏழு நிறங்கள் அடிப்படையிலான படுக்கைவிரிப்புகள் முறை சிறியதுதான் என்றாலும், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடையே நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் சுகாதாரத்தைக் கட்டமைப்பதில் பெரிய பங்கு வகிக்கும்’ என்றாா்.
