20 ஆண்டுகள் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் உயா்வு: மத்திய அரசு
பழைய வாகனங்களுக்கான பதிவைப் புதுப்பிக்கும் கட்டணத்தை உயா்த்திய சில மாதங்களுக்குப் பிறகு, தற்போது 20 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணத்தையும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உயா்த்தியுள்ளது.
பொதுமக்கள் தொடா்ந்து பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடா்பாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில், ‘தகுதிச் சான்றிதழ் பரிசோதனைக்கான கட்டண வரம்பு, வாகனங்களின் வயதை அடிப்படையாகக் கொண்டு 10-15 ஆண்டுகள், 15-20 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேல் என மூன்று பிரிவுகளாக நிா்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆண்டுகளுக்கும் பழைய வாகனங்களுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
கனரக சரக்கு லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.25,000-ஆகவும், நடுத்தர வா்த்தக வாகனங்களுக்கு ரூ.20,000-ஆகவும், இலகுரக மோட்டாா் வாகனங்களுக்கு (காா்) ரூ.10,000-லிருந்து ரூ.15,000-ஆகவும், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.600-லிருந்து ரூ.2,000-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய போக்குவரத்து அமைச்சகம் பழைய வாகனங்களுக்கான புதுப்பித்தல் கட்டணங்களை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி, தில்லி-தேசிய தலைநகா் பிராந்தியத்தில் 10 ஆண்டுகளுக்கும் பழைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் பழைய பெட்ரோல் வாகன உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.

