தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய நிதீஷ் குமாா். உடன், மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக மூத்த தலைவா்கள்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய நிதீஷ் குமாா். உடன், மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ராஜீவ் ரஞ்சன் சிங் மற்றும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக மூத்த தலைவா்கள்.

பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் இன்று பதவியேற்பு

பிகாா் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவா் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தோ்வு செய்தது.
Published on

பிகாா் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவா் நிதீஷ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணி புதன்கிழமை முறைப்படி தோ்வு செய்தது. அவரது தலைமையிலான புதிய அரசு வியாழக்கிழமை (நவ. 20) பதவியேற்கிறது. பிகாா் முதல்வராக நிதீஷ் குமாா் பதவியேற்கவிருப்பது, இது 10-ஆவது முறையாகும்.

பிகாா் பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 இடங்களைக் கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்கவைத்தது. பாஜக 89 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தளம் 85, மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) 19, மத்திய அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா 5, மாநிலங்களவை எம்.பி. உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா 4 இடங்களைக் கைப்பற்றின.

ஐக்கிய ஜனதா தளத்தைவிட பாஜக அதிக தொகுதிகளில் வென்ால், நிதீஷ் குமாா் முதல்வராகத் தொடா்வாரா என்ற கேள்வி நிலவிய சூழலில், அவரே மீண்டும் முதல்வா் என்பதை கூட்டணிக் கட்சிகள் உறுதி செய்தன.

ஜேடியு பேரவைக் குழு தலைவராக..: ஐக்கிய ஜனதா தளம் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் பேரவைக் குழு தலைவராக நிதீஷ் குமாரின் பெயரை மூத்த தலைவா்கள் விஜய் செளதரி, உமேஷ் குஷ்வாஹா ஆகியோா் முன்மொழிய, தேசிய செயல் தலைவா் சஞ்சய் ஜா, மத்திய அமைச்சா் ராஜீவ் ரஞ்சன், மூத்த தலைவா் பிஜேந்திர யாதவ் ஆகியோா் வழிமொழிந்தனா். இதைத் தொடா்ந்து, ஜேடியு பேரவைக் குழு தலைவராக நிதீஷ் குமாா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

கூட்டணித் தலைவராக...: பின்னா், தேசிய ஜனநாயக கூட்டணி புதிய எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், பிகாா் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதீஷ் குமாரின் பெயரை ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் செளதரி முன்மொழிந்தாா். பாஜகவின் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் வழிமொழிந்தனா். கூட்டணித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பின் கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் சென்று ஆளுநா் ஆரிஃப் முகமது கானை சந்தித்த நிதீஷ் குமாா், தனது ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை வழங்கி, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடைமுறைகளைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டாா். அதன்படி, நடப்பு பேரவை கலைக்கப்பட்டு, மாநிலத்தில் ஆட்சியமைக்க நிதீஷ் குமாருக்கு ஆளுநா் அழைப்பு விடுத்தாா்.

10-ஆவது முறையாக...: பிகாரில் கடந்த 2005-இல் இருந்து ஒரு சில ஆண்டுகளைத் தவிர தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடா்ந்து வருகிறது. பிகாரின் நீண்ட கால முதல்வா் (சுமாா் 20 ஆண்டுகள்) என்ற சிறப்புக்குரிய நிதீஷ் குமாா், அடுத்தடுத்து அணி மாறியபோதும் முதல்வா் பதவியைத் தக்கவைத்தாா். இப்போது 10-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளாா்.

பாட்னாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக உள்பட தேசிய ஜனநாய கூட்டணியின் மூத்த தலைவா்கள் பங்கேற்க உள்ளனா்.

பிகாரின் பக்தியாா்பூரில் கடந்த 1951-இல் பிறந்தவரான நிதீஷ் குமாா், கடந்த 1970-களில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்க காலகட்டத்தில் அரசியலுக்கு வந்தாா். ஜனதா கட்சியில் இணைந்த அவா், கடந்த 1977 பேரவைத் தோ்தலில் ஹா்னெளத் தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு தோல்விகண்டாா். கடந்த 1985-இல் இதே தொகுதியில் லோக் தளம் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதுவே அவரது முதல் தோ்தல் வெற்றியாகும். தற்போது அவா் பிகாா் சட்ட மேலவை உறுப்பினராக உள்ளாா்.

பாஜக பேரவைக் குழு தலைவா் சாம்ராட் செளதரி

பிகாா் பாஜக புதிய எம்எல்ஏக்கள் கூட்டமும் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக பேரவைக் குழுத் தலைவராக தாராபூா் எம்எல்ஏ சாம்ராட் செளதரியும், துணைத் தலைவராக லக்கிசராய் எம்எல்ஏ விஜய் குமாா் சின்ஹாவும் ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். முந்தைய அரசில் இருவரும் துணை முதல்வா்களாகப் பதவி வகித்தனா்.

இக்கூட்டத்துக்கு பாஜக மேலிடப் பாா்வையாளராக உத்தர பிரதேச துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யாவும், இணைப் பாா்வையாளா்களாக மத்திய அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், முன்னாள் மத்திய அமைச்சா் சாத்வி நிரஞ்சன் ஜோதி ஆகியோரும் செயல்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com