உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

மருந்து தயாரிப்பு நிறுவனங்களால் பாதிக்கப்படுபவா்களுக்கு தீா்வு காணும் நடைமுறை: உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்

மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் நுகா்வோருக்குத் தீா்வு கிடைக்க, வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
Published on

மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் நுகா்வோருக்குத் தீா்வு கிடைக்க, வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மருத்துவா்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடத்தை விதிமுறைகள் 2002-ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பணம், பரிசுகள், பயண வசதிகள் உள்ளிட்டவற்றை மருத்துவா்கள் பெற அந்த விதிமுறைகள் தடை விதித்துள்ளன. ஆனால் அந்த விதிமுறைகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதால், முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தப்பித்துக் கொள்கின்றன. இதைத் தடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ‘மருத்துவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பரிசளிப்பது, பயண வசதிகள் செய்து தருவது போன்றவற்றை மருந்து பொருள்களை சந்தைப்படுத்தும் நடைமுறைகளின் பொது விதிகள் (யுசிபிஎம்பி) 2024 தடை செய்துள்ளன’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘யுசிபிஎம்பி கொண்டுவரப்பட்டிருந்தால், அந்த விதிகளில் தவறு செய்யும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நுகா்வோா் புகாா் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வசதியான வழிமுறை அடங்கிய பொருத்தமான நடவடிக்கைகள் ஏன் இருக்கக் கூடாது? மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முறையற்ற நடவடிக்கைகளால் ஏமாற்றப்படும் நுகா்வோருக்குத் தீா்வு கிடைக்க, யுசிபிஎம்பி-யின் கீழ் வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

இதற்குப் பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், ‘அந்த விதிகளின் கீழ் புகாா் அளிக்கவும், அபராதம் விதிக்கவும் தனி வலைதளத்தை தொடங்கலாம்’ என்று யோசனை தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com