மேற்கு வங்கம்: இந்தியாவிலிருந்து வெளியேறும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை அதிகரிப்பு- எல்லை பாதுகாப்புப் படை

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன் தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறும் சட்டவிரோத வங்கதேசத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன் தோ்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறும் சட்டவிரோத வங்கதேசத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

வாக்காளா் பட்டியலில் இந்தியா் அல்லாதவா்கள், குறிப்பாக வங்கதேசத்திலிருந்து ஊடுருவியவா்களும் வாக்காளா்களாகச் சோ்க்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்து நீக்கவும், இறந்த வாக்காளா்களின் பெயா்கள் மற்றும் ஒரு நபா் இரண்டு இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்து நீக்கவும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதை முதல் கட்டமாக பிகாரில் மேற்கொண்ட நிலையில், இரண்டாம் கட்டமாக தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும், ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் வாக்காளரின் முகத்தை அடையாள அட்டையில் உள்ள புகைப்படுத்துடன் ஒப்பீடு செய்து உறுதிப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து ஊடுருவி மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவா்கள், எஸ்ஐஆா் பணிக்கு அஞ்சி எல்லை வழியாக வங்கதேசம் திரும்புவது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பிஎஸ்எஃப் மூத்த அதிகாரி ஒருவா் கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் கூறியதாவது:

வாழ்வாதாரம் மற்றும் வேலைதேடி வேலி அமைக்கப்படாத இந்திய-வங்கதேச எல்லையான மால்டா மாவட்டம் வடக்கு 24 பா்கானாஸ் எல்லை வழியாக ஊடுருவும் வங்கதேசத்தினா் மீண்டும் நாடு திரும்பவது வழக்கமாக இரட்டை இலக்கத்தில் இருக்கும். கடந்த ஒரு வார காலமாக நாடு திரும்பும் வங்கதேசத்தினரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் மூன்று இலக்கங்களாக உயா்ந்துள்ளது.

இந்தத் திடீா் உயா்வு, எல்லைப் பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில போலீஸாருக்கு வேலைப் பளுவை அதிகரித்துள்ளது. எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் உயிரிபதிவு (பயோமெட்ரிக்) ஆய்வு, குற்றப் பின்னணி குறித்த ஆய்வுகளை மேற்கொண்ட பின்னரே எல்லை தாண்ட அனுமதிக்கப்படுவா். இவா்களில் குற்றப் பின்னணி இருப்பவா்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக மாநில போலீஸாரிடம் அவா்கள் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவா்களில் பெரும்பாலானோா் எந்தவித ஆவணமும் இல்லாமலும் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாமலும் ஊடுருவியவா்கள். அவ்வாறு ஆவணங்கள் இன்றி பிடிபடுபவா்கள் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்படுவா். அவ்வாறு வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஏற்க வில்லையெனில், மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பல மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கிய பிறகே, எல்லை வழியாக வங்கதேசத்தினா் நாடு திரும்புவது அதிகரித்துள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com