

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், நவ., 24 ஆம் தேதி வரை 5,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் செய்ய திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
முன்பு, நாளொன்றுக்கு 20,000 பேருக்கு ஸ்பாட் புக்கிங் அனுமதிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கோவில் நிர்வாகம் திணறி வருகிறது.
கடந்த 16 ஆம் தேதி முதல் இன்று வரை 3 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக சபரிமலை ஏடிஜிபி ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். இதனிடையே கூட்ட நெரிசல் காரணமாக கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், வழக்கமாக பிற்பகல் 1 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு 3 மணிக்குத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், பிற்பகல் 2 மணி வரை நடை திறந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் 20 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டு வந்த ஸ்பாட் புக்கிங் வரும் திங்கள் கிழமை (நவ., 24) வரை 5000 பேருக்கு மட்டுமே வழங்கப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.
மேலும், பக்தர்கள் சன்னிதானம் வருவதை எளிமையாக்க நிலக்கல்லில் ஏழு கூடுதல் முன்பதிவு மையங்கள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளன. சன்னிதானத்தில் வரிசைகள் சீரமைக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | பாபா சித்திக் வழக்கு: அன்மோல் பிஷ்னோயிக்கு 11 நாள்கள் விசாரணைக் காவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.