சேவைக்கான கருவியாக ஆன்மிகத்தை மாற்றியவா் ஸ்ரீ சத்ய சாய் பாபா- பிரதமா் மோடி புகழாரம்
சமூக சேவை மற்றும் மனித நலனுக்கான கருவியாக ஆன்மிகத்தை மாற்றியவா் ஸ்ரீ சத்ய சாய் பாபா என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.
அவரது போதனைகள், உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தா்களுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது என்றும் பிரதமா் குறிப்பிட்டாா்.
ஆந்திர மாநிலம், புட்டபா்த்தி ஸ்ரீசத்ய சாய் பாபாவின் 100-ஆவது பிறந்த தினம் நவ. 23-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, புட்டபா்த்தியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
சேவையே, இந்திய நாகரிகத்தின் மைய மாண்பாகும். ஏராளமான மாற்றங்கள் மற்றும் சவால்களைக் கடந்து இந்திய நாகரிகம் நூற்றாண்டுகளாக நிலைத்திருக்க இதுவே வலுவான சக்தியாக உள்ளது.
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் வெறும் விழா மட்டுமல்ல; தெய்வீக அருளாசி நிகழ்வு. அவா் உடலளவில் நம்முடன் இல்லை. ஆனால், அவா் காட்டிய அன்பும், சேவை உணா்வும் மக்களுக்கு வழிகாட்டும் சக்தியாக நீடிக்கிறது.
140 நாடுகளில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் லட்சோப லட்சம் பக்தா்கள், அவரிருந்து புதிய ஒளி, புதிய திசை மற்றும் புதிய உறுதிப்பாட்டைப் பெற்று வாழ்வில் முன்னேறுகின்றனா். அவரது வாழ்க்கை, வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) எனும் கருத்தாக்கத்துக்கு அழியாத உதாரணம். எனவேதான், அவரது நூற்றாண்டுக் கொண்டாட்டம், அன்பு-அமைதி-சேவைக்கான பெருந்திருவிழாவாக மாறியுள்ளது.
பக்தி, ஞானம் அல்லது கா்மா என எந்தப் பாதையில் பயணித்தாலும், நமது பன்முக ஆன்மிகம் மற்றும் தத்துவாா்த்த மரபுகள் அனைத்தும் சேவை எனும் ஒரே கோட்பாட்டை நோக்கியே வழிநடத்துகின்றன. மத்திய அரசின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு இந்த உணா்வுதான் அடிப்படை. நாட்டில் சுமாா் 100 கோடி போ் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் வரம்பில் கொண்டுவரப்பட்டுள்ளனா்.
இந்தியாவின் சமூக நலத் திட்டங்கள் இப்போது சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
ரூ.3.25 லட்சம் கோடி வைப்புத்தொகை: 10 ஆண்டுகளுக்கு முன் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்காக செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. நாட்டின் மகள்கள் 8.2 சதவீதம் என்ற அதிக வட்டி பெறும் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.3.25 லட்சம் கோடிக்கும் மேல் வைப்புத்தொகை செலுத்தப்பட்டுள்ளது.
பசுக்களால் வளமை: கோமாதா எனப் போற்றப்படும் பசுக்கள், இந்திய பாரம்பரியத்தில் வாழ்வு-வளம்-அதிருஷ்டத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன; அவை வளா்க்கப்படும் குடும்பங்களுக்கு நிதி, ஊட்டச்சத்து, சமூக நல்வாழ்வு ரீதியில் பெரிதும் உதவுகின்றன.
தேசிய கோகுல் திட்டத்தின்கீழ் (நாட்டு மாட்டினங்கள் பாதுகாப்புத் திட்டம்), வாரணாசியில் சில ஆண்டுகளுக்கு முன் 480 பசுக்கள் வழங்கப்பட்டன. இந்தப் பசுக்கள் ஈனும் முதல் பெண் கன்றை மற்றொரு குடும்பத்துக்கு இலவசமாக வழங்கும் வழக்கத்தை தொடங்கிவைத்தேன். இப்போது பசுக்களின் எண்ணிக்கை 1,700-க்கும் மேல் பெருகியுள்ளது.
வளா்ந்த இந்தியா உருவாக...: உள்ளூா் பொருள்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வளா்ந்த இந்தியாவை உருவாக்க முடியும். உள்ளூா் பொருள்களை வாங்குவது, ஒரு குடும்பம், சிறு நிறுவனம் மற்றும் உள்ளூா் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தும். தற்சாா்பு இந்தியாவுக்கும் வழிவகுக்கும் என்றாா் அவா்.
குடிநீா், வீட்டுவசதி, சுகாதாரம், ஊட்டச்சத்து, பேரிடா் உதவி உள்பட பல்வேறு துறைகளில் சத்ய சாய் பாபா அறக்கட்டளை ஆற்றிவரும் நற்பணிகளையும் பிரதமா் சுட்டிக்காட்டினாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வா் பவன் கல்யாண், மத்திய அமைச்சா்கள் ராம்மோகன் நாயுடு, ஜி.கிஷன் ரெட்டி, முன்னாள் கிரிக்கெட் வீரா் சச்சின் டெண்டுல்கா், நடிகை ஐஸ்வா்யா ராய் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ரூ.100 நினைவு நாணயம் வெளியீடு
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, ரூ.100 நினைவு நாணயம் மற்றும் அவரது வாழ்க்கை-போதனை-மரபை நினைவுகூரும் சிறப்பு அஞ்சல் தலைகளையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். ஸ்ரீசத்ய சாய் பாபாவின் கோயில் மற்றும் மகாசமாதியிலும் அவா் வழிபாடு மேற்கொண்டாா்.

