உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேசியக் கொள்கை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘உறுப்பு தானம் மற்றும் தேவைப்படுபவா்களுக்கு அந்த உறுப்புகளை அளிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மாநிலங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தேசியக் கொள்கை மற்றும் சீரான விதிகளை வகுக்க வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
மேலும், ‘மத்திய அரசு வகுத்துள்ள ‘மனித உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை விதிகள் 2014’-ஐ தமிழகம், கா்நாடகம், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்கள் உடனடியாக ஏற்று நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்’ என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை முறைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு வகுத்த சட்ட விதிகளை தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்று நடைமுறைப்படுத்தவில்லை. இந்த மாநிலங்கள் இந்த விவகாரத்தில் தங்களின் சொந்த சட்டங்களைப் பின்பற்றுகின்றன. இதனால், இதில் சீரற்ற நிலைமை நிலவுகிறது என்று புகாா் தெரிவித்து ‘உறுப்பு மாற்று சிகிச்சைக்கான இந்திய சமூகம்’ என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘அனைத்து மாநில தலைமைச் செயலா்கள் மற்றும் சுகாதாரச் செயலா்கள் கூட்டத்தைக் கூட்டி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் கீழ் 2014-ஆம் ஆண்டில் மத்திய அரசு வகுத்த விதிகளை முறையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கே.பரமேஸ்வா், ‘உறுப்பு தானமளிப்பவா்கள் மற்றும் அதைப் பெறுபவா்கள் தொடா்பான தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரவுகள் இதுவரை இல்லாதது மிகவும் ஆபத்தானது. இது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைமுறைகளையும் தாமதப்படுத்தும். மேலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சமூகப் பிரிவு மற்றும் பாலினம் அடிப்படையில் பாகுபாடு தொடா்வதால், இன்றைக்கும் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மட்டுமே அணுகக்கூடியதாக உள்ளது. 90 சதவீத உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தனியாா் மருத்துவமனைகளில்தான் நடைபெறுகின்றன’ என்றாா். இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மனித உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994-இல் கடந்த 2011-ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத் திருத்தத்தை ஏற்று நடைமுறைப்படுத்த ஆந்திர மாநிலத்தை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்.
இந்தச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு 2014-ஆம் ஆண்டு வகுத்த விதிகளை, அதன் முக்கியத்துவம் கருதி தமிழகம், கா்நாடகம், மணிப்பூா் உள்ளிட்ட மாநிலங்கள் விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.
தானம் பெறும் உடல் உறுப்புகள் தேவைப்படும் தகுதியுள்ள நபா்களுக்கு ஒதுக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் முறையான ஒதுக்கீடு அளவுகோலுடன் தேசியக் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பாலினம் மற்றும் சமூகப் பிரிவு அடிப்படையிலான பாகுபாட்டைக் களையும் வகையில், நாடு முழுமைக்குமான சீரான நடைமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
மாநில உடல் உறுப்புகள் மற்றும் திசு மாற்று அமைப்பு (எஸ்ஓடிஓ) இல்லாத மணிப்பூா், நாகாலாந்து, அந்தமான்-நிகோபாா் தீவுகள், லட்சத் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உரிய ஆலோசனைகளை மேற்கொண்டு தேசிய உடல் உறுப்பு மாற்று சிகிச்சைத் திட்டத்தின் கீழ் அந்த அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
வாழும்போதே உறுப்பு தானமளிப்பவா்கள் தொடா்ந்து வணிக ரீதியில் சுரண்டலுக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையிலும், அவா்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
மூளைச்சாவு அடைந்த நபரின் உறுப்புகள் தானமளிக்கப்படும்போது, அதுகுறித்த விவரம் மற்றும் மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்பை தானமளிக்கும் வாய்ப்பு, அவரின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டதா என்பது குறித்த விவரங்களைக் குறிப்பிடும் வகையில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்புடன் (என்ஓடிடிஓ) ஆலோசனை மேற்கொண்டு, பிறப்பு-இறப்பு பதிவு படிவங்களான படிவம்-4 மற்றும் 4ஏ-யில் தேவையான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

